Monday 10 April 2023

சம்பளக் குறைப்பு - பாராட்டுவோம்!

 

                                                     மலேசிய நாடாளுமன்றம்

சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள்.  நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 20 விழுக்காடு  தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.  பிரதமர் தனது சம்பளத்தை வாங்குவதில்லை.  இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பன்னிரெண்டு  இலட்சம் வெள்ளி சேமிக்கப்படுவதாக  பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி  கூறியிருக்கிறார்.

அரசாங்கத்திற்கு பன்னிரெண்டு இலட்சம் என்பதெல்லாம் மிகச் சாதாரண தொகை தான். செலவுகளோ கோடிக்கணக்கில். இலட்சங்கள் என்ன பெரிசா? இருந்தாலும் பரவாயில்லை. சிறிய துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா. அதனால் இந்த பன்னிரெண்டு இலட்சம் என்பது கூட ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நம்பலாம்.

அதே நேரத்தில் வேறொன்றையும் கவனிக்க வேண்டும்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு நாட்டு நடப்பு தெரிவதில்லை. அதனால் தான்  இன்றும் நம்மிடையே தங்களது குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பவர்கள் இருக்கிறார்கள்!   இன்னும் பலர் தாங்கள் ஷோப்பிங் செய்வதே வெளிநாடுகளில் தான்! அந்த அளவுக்கு அவர்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்கள் என்றால் குறை சொல்ல ஒன்றுமில்லை.  ஆனால் இவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள்! இவர்களிடம் தான் பணம் கொட்டிக்கிடப்பதாக  மக்கள் நம்புகிறார்கள்! 

அதனால் அரசியல்வாதிகள் ஒரு சிறிய தொகையை தங்களது சம்பளத்திலிருந்து  கொடுப்பதனால் அவர்கள் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை.  அவர்களும் இந்த நாட்டில் நல்லது கெட்டதுகளில் பங்கு எடுப்பதில்  தவறில்லை!

ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும்.   இன்றை விலைவாசிகள் நம்மைப் விழி பிதுங்க வைக்கின்றன. அரசாங்கம் விலைகளைக் குறைக்க  பல முயற்சிகள் எடுக்கின்றது. நாமும் அவர்களோடு சேர்ந்து அரசாங்கத்திற்கு ஒத்துழப்பை நல்க வேண்டும்.  தேவை என்றால் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். வாங்கிக் குவிப்பது,  இருப்பை அதிகரிப்பது - இவைகளெல்லாம்  தேவையற்ற வேலை.   இப்படி  பொது மக்கள் செய்தால்  வியாபாரிகள் பொருள்களைப் பதுக்குவார்கள்.  அதன் விலைகளை ஏற்றுவார்கள!   

வியாபாரிகள் விலைகளை ஏற்றுவதற்கு  மக்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். 

இந்த கஷ்ட காலத்திலும் நாமும் இருக்கிற பணத்தை வாரி  கொட்டாமல்  அதிலும் கொஞ்சம் இருப்பை சேர்த்து வைக்க வேண்டும். கஷ்டம் சரி, விலையேற்றம் சரி அதற்காக இருக்கிற பணத்தை எல்லாம் செலவழிக்க வேண்டும் என்பதில்லை.  அதிலும் கொஞ்சம் மிச்சம் பிடிக்க வேண்டும்.  அதுதான் சரியான வாழ்க்கை!   20 விழுக்காடு  நாமும் சேமிக்கலாம். அரசியல்வாதிகள் செய்வது நாட்டுக்காக! நாம் சேமிப்பது நமது நலனுக்காக!

No comments:

Post a Comment