Sunday 27 August 2023

இது ஜ.செ.க.வின் தவறு!

 

இப்போது நமது சமூகத்தின் பேசுபொருள்  என்றால் அது பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது துணை முதல்வர், , ஜக்டீப் சிங் பற்றியான செய்தி. 

முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது அதிருப்தி என்பது  நமது  சமூகத்திற்கும் ஜக்டிப் சிங் குக்கும் அல்ல. அல்லது தமிழ் சமூகத்திற்கும்  பஞ்சாபியர் சமூகத்திற்கும் அல்ல. அல்லது மற்ற இந்திய சமுகத்தோடும் அல்ல.

இந்தப் பிரச்சனையில் நாம் குற்றவாளி என்று கைநீட்ட வேண்டுமானால்  அது ஜனநாயக செயல் கட்சியின் தலைமத்துவம் தான். அவர்கள் தேவையற்ற ஒரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு இப்போது ஒன்றும் தெரியாதவர்கள் போல நமது வாய்ச்சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

ஒன்று தெரிகிறது. நமக்குள்ளயே சண்டை போடுவது அவர்களுக்குக் மகிழ்ச்சியளிக்கிறது. பினாங்கு மாநிலத்தில் கூட இந்தியர்கள் என்று எடுத்துக் கொண்டால்  தமிழர்களே அதிகமாக இருக்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் துணைமுதல்வர் பதவி தமிழர்களுக்குத்தான்  என்பதும் தமிழர்கள் எதிர்பார்த்த ஒரு பதவி.

முதலாவது துணைமுதல்வர் என்றால் அது மலாய்க்காரர் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. முதல்வர் பதவி என்றால் அது சீனருக்குத்தான் என்பது எழுதப்படாத விதி. அதே போல இரண்டாவது துணை முதல்வர்  என்றால் அது தமிழருக்குத்தான். அதில்  எந்த வேறுபாடும் இல்லை. அங்கு இந்தியர் என்றாலும் அது தமிழரைத்தான் குறிக்கும். முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் குறிப்பிடுவது போல  அது தமிழருக்கான பதவி என்று உறுதியாகக் கூறுகிறார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட ஹின்ராப் போராட்டத்தின் விளைவு தான் அந்தத் துணை முதல்வர் பதவி. அந்தப் போராட்டம் என்பது தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.  ஒரு சிலர் பிற சமுகத்தினராக இருக்கலாம். அவர்கள் எல்லாம் அந்தப் போரட்டத்தைப்  பயன்படுத்தி  தங்களை வளர்த்துக் கொண்டார்கள். ஏமாந்தவன் தமிழன் தான்.

இப்படி ஒரு பிரச்சனையை, தமிழர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தவர்கள்,  சாட்சாத் ஜனநாயக செயல் கட்சியினர் தான். அவர்களின் போக்கு மாறிவிட்டது.  இப்போது எல்லா மாநிலங்களிலும் தமிழர்களைக்  களையெடுத்து வருவதாகவே தோன்றுகிறது. அதில் முதல் பலி தான் பேராசிரியர்  இராமசாமி அவர்கள். அவரைக் களையெடுத்தால் தமிழர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள.

ஒன்றை அவர்கள் மறந்து விட்டார்கள். தமிழர்கள் அப்படியெல்லாம் வாய்மூடி மௌனியாக இருக்கப் போவதில்லை. அவர்களின் எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! வேண்டாமென்றால் அந்தக்கட்சியை ஒதுக்கிவிடுவார்கள். ம.இ.கா. வை என்ன நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்!

அடுத்து ஜ.செ.க. வாக இருக்கலாம்!

No comments:

Post a Comment