Thursday 3 August 2023

பெற்றோர்களே! அலட்சியம் வேண்டாம்!

 

நாம் நம் குழந்தைகளுக்குச் சரியான பாதுகாப்புக் கொடுக்கிறோமா எனபதைப் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும்.

பெற்றோர்களின் கவனக் குறைவினால்  குழந்தைகளின் மரணம் என்பது  தொடர்ந்து கொண்டே இருப்பது மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி.  இது நடந்தது இந்தியா,  பெங்களூரு . கைப்பேசியை சார்ஜ் பண்ண பயன்படுத்தப்படும் வயர் எப்படியோ குழந்தையின் கைகளின் அகப்பட்டுக்கொண்டது.  குழந்தைகள் எது கையில் அகப்பட்டாலும் அது உடனே வாயில் தான் வைக்கும். இது இயல்பு நாம் பார்த்திருக்கிறோம்.  குழந்தை பிழைக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் ஒரு தவறு நடந்துவிட்டது.

கைப்பேசி சார்ஜ் ஆனதும் அதன் சுவிட்சை அணைக்காமல்  அப்படியே விட்டுவிட்டது குழந்தைக்கு எமனாகி விட்டது.  குழந்தை  சார்ஜரில் உள்ள பின்னை கடிக்க ஆரம்பித்ததால் மின்சாரம் தாக்கி குழந்தைக்கு  ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.

யாரை நாம் குற்றம் சொல்லுவது? எட்டு மாத குழந்தைக்கு என்ன தெரியும்?  எந்தப் பொருள் கையில் அகப்பட்டாலும் அது வாயில்  வைத்து சப்பத்தான் செய்யும்.  முதலில் குழந்தைகளுக்கு  இது போன்ற எலக்டிரிக் பொருள்களை கைகளுக்கு எட்டாதவாறு  வைத்திருக்க வேண்டும். ஆனால் மிக முக்கியம் சார்ஜ் செய்த பிறகு சுவிட்சுகளை அணைத்துவிட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம். இந்த அலட்சியத்தை நாம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கத்தான் செய்கிறோம்.  யாரும் அதனைப்  பொருட்படுத்தவதில்லை.  அந்த அளவுக்கு நாம் அலட்சியமாக  நடந்து கொள்கிறோம்.

குழந்தைகள் இருக்கும் இடங்களில் அதுவும் ஓடி ஆடி துருதுருவென இருக்கும் குழந்தைகள் இருக்கும் இடங்களில்  அலட்சியமாக இருந்துவிட 
முடியாது.  

சில ஆண்டுகளுக்கு முன் நம் ஊரில் நடந்த ஒரு சம்பவம்.  ஐந்து வயது பேரன்,  பாட்டி சாப்பிடும் மருந்துகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டு விட்டான். இறந்து போனான்.  குழந்தைகள் இருக்கும் இடங்களில் மிக மிகக் கவனம் தேவை.  அலட்சியம் வேண்டாம்.

மீண்டும் நாம் சொல்லுவது இதுதான்.  பெற்றோர்களே அதுவும் இளம் பெற்றோர்களே  உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்  மிக மிக எச்சரிக்கையாய் இருங்கள். குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வெளியில் இருந்தும் வருகின்றன. வீட்டிலிருந்தும் வருகின்றன. 

பெற்றோர்களே! நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment