Friday 16 March 2018

ம.இ.கா. தேறுமா...?


வருகின்ற 14-வது பொதுத் தேர்தல் நாட்டை ஆளும் பாரிசான் நேஷனலின் முக்கிய பங்காளி கட்சியாக விளங்கும் ம.இ.கா. தொடர்ந்து தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது மக்கள் அந்தக் கட்சியை தள்ளி வைத்து விடுவார்களா?

மிகவும் சிக்கலான கேள்வி!  ம.இ.கா.வில் உள் கட்சி சண்டை என்பது எல்லாக் காலங்களிலும் தொடரும் ஒரு கலாச்சாரமாகவே வளர்ந்து விட்டது. 13-வது தேர்தலுக்குப் பிறகு என்று கணக்குப் போட்டுப் பார்த்தால்  கட்சியின் உள் சண்டையே மிகப் பிரதான 'மக்கள் தொண்டாக'  அந்தக் கட்சியின் கொள்கையாக இருந்து வந்துள்ளது!

கட்சியில் எந்தக் கொள்கையும் இல்லை! இந்தியர்களின் பிரச்சனையைக் கவனிக்க ஆள் இல்லை. அவர்களுக்கு என்ன தான் தேவை என்பதைக் கூட ம.இ.கா.வினர் அறிந்திருக்கவில்லை! ம.இ.கா. தலைவருக்கு மிக முக்கியமான பிரச்சனை என்பது,  கூட இருக்கும் தன்னை ஆதரிக்கும் தலைவர்களை என்ன பதவிக் கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான்! இல்லாவிட்டால் அவர்களால் தலைவருக்கு ஆபத்துக்கள் வரலாம்! 

ம.இ.கா. வில் உள்ள தலைவர்களைப் பொறுத்தவரை ம.இ.கா  தங்க முட்டை இடும் வாத்து! தமிழ்ப்பள்ளிகளை வைத்தே கோடிக்கணக்கில் மானியங்கள் அரசாங்கத்தால்  வழங்கப்படுகின்றன. அந்த மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை என்பது எப்போதுமே உள்ள ஒரு குற்றச்சாட்டு!

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனால் கூட  அவர்களுக்கு அது  ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை.  அவர்களுக்குச் செனட்டர் பதவி கிடைக்கலாம். அமைச்சர்களுக்கு எடுபிடியாக வரலாம்! சில அரசாங்கப் பதவிகளுக்குத் தலைவராகப் போகலாம்! எப்படிப் பார்த்தாலும் தேர்தலில் தோற்றுப் போனாலும் - அதுவே அவர்களுக்கு ஒரு கூடுதல் தகுதியாக'  ஆகி விடுகிறது!

ஆனால் மக்களைப் பொறுத்தவரை ம.இ.கா. வால் என்ன இலாபம்?  என்ன கொள்கைகளை வைத்து இவர்கள் வாக்குக் கேட்பார்கள்?  நாடற்றவர்கள் பிரச்சனை நம் கண் முன்னே நிற்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை! வேலையில்லாப் பிரச்சனைக் கூடிக்கொண்டே போகிறது. வெளி நாட்டவர்களுக்கு வேலைக் கிடைக்கிறது. உள் நாட்டினருக்கு வேலைகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் வருகின்ற பொதுத் தேர்தலில் ம.இ.கா. தேறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! தொண்டு தான் நோக்கம் என்றால் தேறும்! பணம் தான் நோக்கம் என்றால் தேறாது!

No comments:

Post a Comment