Saturday 24 March 2018

ஏன் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள்..?


ம.இ.கா. தலைவர்கள் ஏன் இந்தியர்களை ஏமாற்றுகிறார்கள்?

சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் "இந்தியர்களுக்கு நாங்கள் முழுமையாகச் செய்யாவிட்டாலும் ஏதோ ஓரளவு "ஏனோ தானோ" என்று செய்திருக்கிறோம்! அந்த "ஏனோ தானோ" விலும் ம.இ.கா. தலைமை மடை மாற்றிக் கொண்டது!" என்று கூறியிருக்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று தான். டாக்டர் மகாதிர் காலத்தில் எதுவும் நடக்கவில்லை.   சரி, இப்போதாவது ஏதாவது நடக்கிறதா?   ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இப்போதும் எதுவும் நடக்கவில்லை!  இப்போது யாரைக் குற்றம் சொல்லுவது? இப்போதைய பிரதமரையா அல்லது ம.இ.கா. தலைமையையா? 

நம்மைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கு ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை! அது பற்றி விளாவாரியாக நாம் போகவில்லை. நமக்குத் தெரிந்தவரை ம.இ.கா. இந்தியர்களுக்குச் செய்தது துரோகம் மட்டும் தான்!

இன்னொரு கோணத்தில் பார்ப்போம். முந்திய தலைமை ஒன்றும் செய்யவில்லை என்று இன்று பேசுகிறோம். ஒன்றும் செய்யாத தலைமை, செயல்படாத தலைமை அப்படி செயல்படாத தலைமையின் இன்றைய நிலைமை என்ன?  அவர் மூலையில் முடங்கியா  கிடக்கிறார்? அவர்  ஒரு அமைச்சராக உலகம் பூராவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்! இது எப்படி நடந்தது?  அவர் இந்திய சமுதாயத்திற்குச் செய்தத் துரோகத்திற்காக இந்த அமைச்சர் பதவி அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்று எடுத்துக் கொள்ளலாமா?  அதாவது இந்திய சமுதாயத்திற்கு நீங்கள் ஒன்றும் செய்யாவிட்டால் பதவி முடிந்ததும் உங்களுக்கு உயர் பதவி கொடுக்கப்படும் என்று ம.இ.கா. தலைவர்களுக்கு அரசாங்கம் உறுதி அளித்திருக்கிறதோ! இன்றைய தலைவர்களுக்கும் அது பொருந்தும்  என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! இப்போது உள்ளவர்கள் இந்திய சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வந்தால் இவர்கள் பதவி காலம் முடிந்ததும்      இவர்களுக்கும் தகுந்த 'சன்மானம்' வழங்கப்படலாம் அல்லவா!

வேறு நாம் எப்படி இதனைப் பார்ப்பது? ஒரு சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே வந்தால் அதனை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? ஒரு சிறிய பிரச்சனையைக் கூட தீர்த்து வைக்க முடியாத ஒரு தலைமையை நாம் சீராட்டி, பாராட்டியா வரவேற்க முடியும்?

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.  நமது தலைவர்கள் நம்மை ஏமாற்ற வேண்டும் என்பது தான் அரசாங்க உத்தரவு. அதனை அவர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள். 

 ஏமாற்றுபவன் ஏமாறுவான் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்!




No comments:

Post a Comment