Wednesday 7 March 2018

ஏன் இந்த புறக்கணிப்பு?


இன்று ஒரு சில நிறுவனங்கள், தமிழர் நிறுவனங்கள் என்று நாம் நினைக்கும் நிறுவனங்கள்,  தமிழைப் புறக்கணிக்கின்றன. இது ஏன் என்று உள்ளே நுழைந்து பார்த்தால் இவை உண்மையில் தமிழர் நிறுவனங்கள் அல்ல.  தமிழ் நாட்டில் என்ன நடக்கின்றனவோ  அது தான்  இங்கும் நடக்கின்றது.

அவை தமிழர் நிறுவனங்கள் அல்ல என்பது உண்மையாக இருந்தாலும் தொண்ணூறு விழுக்காடு தமிழர்களை நம்பி வாழும் நிறுவனங்கள். சான்றுக்கு ஒரு நிறுவனத்தின் காலண்டர் எனது வீட்டில் ஓரிரு நாள்களுக்கு முன்னர் தான் கவனித்தேன்.  அது பிரபலமான ஒரு நிறுவனம். பெண்கள் அணியும் ஆபரணங்களை விற்பனைச் செய்யும் ஒரு நிறுவனம்.  அனைத்தும் செயற்கை அணிகலன்கள். சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் ஐந்து கிளைகளைக் கொண்ட நிறுவனம்.

அவர்களை நாம் பாராட்டுகிறோம். இந்தியர்கள் தொழிற்துறையில் மூன்னேறுவதை வரவேற்கிறோம். 

ஆனால் ஒரு இந்திய  நிறுவனம் மிக உயர்ந்த தரத்தில் தயாரித்திருக்கும் காலண்டரில் ஒரு தமிழ் எழுத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சராசரியாக வெளியாகும் காலண்டரில் - அதாவது குதிரைப்பந்தய காலண்டர் என்போமே - அவைகளில் கூட காலண்டரின் மேலே நமது நிறுவனங்களில் பெயரைப் போடலாம். ஆனால் பெரும் பணம் செலவழித்து மிக உயர்தரமாகத் தயாரிக்கப்படும் காலண்டரில் ஒரு தமிழ் எழுத்தைக் கூட பயன்படுத்தவில்லை என்றால் அது தமிழரை, தமிழைப் புறக்கணிப்பதாகும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான். இது போன்ற நிறுவனங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களுக்கு நாம் ஆதரவு கொடுப்பது அவசியம். என்ன தான் இந்திய நிறுவனங்கள் என்று நமது ஆதரவை நாம் அவர்களுக்குக் கொடுத்தாலும் அவர்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்ளுவதும், தமிழையும், தமிழரையும் கேவலப்படுத்துவதையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.  தமிழர்களை இன்னும் இளிச்சவாயர்கள் என்று அவர்கள் நினைத்தால் நாம் திருப்பி அவர்களை அடிக்கமுடியாது.  ஆனால் அவர்களை நாம் புறக்கணிக்க முடியும்.

இனி மேலும் தமிழைப் புறக்கணிக்கும் எந்த நிறுவனங்களாக இருந்தாலும் சரி நாமும் அவர்களைப் புறக்கணிப்போம். நமது பெருந்தன்மையை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதை நம்மால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது! செயலில் காட்டுவோம்!

 

No comments:

Post a Comment