Thursday 29 March 2018

பெண்களுக்குக் கல்வியை மறுக்காதீர்கள்!


மலேசிய இந்தியர்களில் கல்வியில் பின் தங்கிய சமூகம் என்றால் அது தமிழர்களாகத்தான் இருக்க முடியும். அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றாலும் குடிகாரப் பெற்றோர்கள் என்றால் எல்லாமே பாழாகிவிடும்.  குண்டர் கும்பல், கஞ்சா கும்பல், உலகே மாயம் என்று காற்றில் பறந்து கொண்டிருக்கும் கும்பல், அரசியல்வாதிகளின் பின்னால் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் கும்பல் - சுருக்கமாகச் சொன்னால் குடிகாரக் கும்பல்! 

இவர்கள் வீட்டுப் பிள்ளைகளை எப்படிக் கரை சேர்ப்பது  என்பது பெரிய கேள்விக்குறி.  பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் மீது அக்கறை இல்லையென்றால் பிள்ளைகளும் கல்வி மீது அக்கறை இல்லாமல் போவது இயல்பு.  அதுவும் பெண் பிள்ளைகள் என்றால் அவர்களின் எதிர்காலமே இருண்ட காலமாகி விடும்.

ஆனால் இவர்களும் கரை சேர்க்கப்பட வேண்டும்.  அதுவும் பெண் பிள்ளைகளின் கல்வி மிக முக்கியம். இவர்கள் கல்வி கற்றால் தான் அடுத்த தலைமுறையாவது மாறக் கூடிய வாய்ப்பு உண்டு. ஒரு சில பெற்றோர்களின் அலட்சியம் நமக்கு வேதனைத் தருவதாகத்தான்  உள்ளது. பரிட்சையில் தோல்வி என்றதும்  உடனே ஏதாவது ஒரு தொழிற்சாலைக்கு  வேலைக்கு அனுப்புகின்ற பழக்கம் இன்னும் நம்மிடம் இருந்து மறையவில்லை! ஏதோ ஆயிரம் வெள்ளி சம்பளம் கிடைக்கும்  போய் சம்பாதிக்கட்டும் என்று அலட்சியம் காட்டும் சமுகமாக நாம் மாறிவிட்டோம்.  அந்த ஆயிரம் வெள்ளியைக் கூட பிள்ளைகளின் நலனுக்காகப் பயன்படுத்துவதில்லை. அதனையும் குடித்தே அழித்துவிடும் பழக்கம் நம்மிடையே உள்ளது!

என்ன தான் முடிவு?  தக்கவர்கள் எடுத்துச் சொல்லி இவர்களின் கல்வி தொடரப்பட வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தங்களின் அறிவைக் வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். பிள்ளைகளுக்கு எல்லாத் திறமைகளும் உண்டு. வீட்டுச் சூழல் அவர்களைத் தடுமாற வைக்கிறது. தடம் மாற வைக்கிறது.

நிறைய  தொழிற்பள்ளிகள் நாடெங்கும் இருக்கின்றன.  அரசாங்கமும் நம்மின மாணவர்களுக்கு  வாய்ப்புக்கள் கொடுக்கின்றது. அவர்களுக்கு மாதாமாதம் பணமும் கொடுத்து  கல்வியும் கொடுக்கின்றது.  கொடுக்கின்ற தொகை சிறியதாக இருந்தாலும் படிக்கும் போது ஏற்படுகின்ற செலவுகளை ஈடுகட்டும். அதிலும் குறை சொல்லுகின்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள்! இங்கு படிப்பு என்பது தான் முக்கியமே தவிர பணம் அல்ல!

பெற்றோர்களே!  உங்கள் பிள்ளைகளின் கல்வியைப் புறக்கணிக்காதீர்கள். அதுவும் பெண் பிள்ளைகளின் கல்வி இன்னும் முக்கியம்.  கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!

No comments:

Post a Comment