Monday 2 August 2021

சார்பட்டா பரம்பரை!

 இதனை ஒரு விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

எனது எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.அவ்வளவு தான். நான் இயக்குநர்  பா.ரஞ்சித்தின் ரசிகன் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.

அவருடைய "கபாலி" படம் தான் நான் முதன் முதலில் பார்த்தேன். நான் மிகவும் ரசித்த படம். அதன் பிறகு தான் அட்டைக்கத்தி, மெட்ராஸ் போன்ற  படங்களைப் பார்த்தேன். மூன்று படங்களையுமே என்னால்  புரிந்து கொள்ள உடனே முடியவில்லை! ஏதோ ஒரு படம் என்று தான் பார்த்தேன்! இப்போது புரிகிறது!

இந்த வரிசையில் "சார்பட்டா பரம்பரை" அதுவும் அமேசோன் கட்டண வலைதளத்தில்! திரை அரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் வசூலை அள்ளிக் கொட்டியிருக்கும்! இனி வருங்காலம் கட்டண வலைதளத்தில் தான் என்கிற நிலைமை உருவாகி`விட்டது.

இந்தப் படத்திற்கு முதலில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.  அவர் சரியாக வரமாட்டார். காரணம் அவர் தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். இது குத்துச்சண்டை படம்.  முகத்தில் காயங்களோடு இந்தப் படம் முடியும் வரை அவரால் வேறு படங்களில் நடிக்க முடியாது. டூப் போட வேண்டி வரும். நடிகர் ஆர்யா நல்ல முடிவு தான். சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

ஒரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.  அந்தக்  காலக்கட்டத்தில் வடசென்னை  மனைவியர்கள் கணவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது, வாடா போடா என்பது, தேவை என்றால் அடிக்கவும் செய்வது, துணிந்து ஆண்களை எதிர்த்து நிற்பது - இப்படி அவர்கள் துணிச்சல் மிக்க பெண்களாக இருந்திருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அன்றைய வடசென்னை கலாச்சாரம் இன்றைய தென்சென்னை + இளம் மனைவியரிடம் வந்திருக்கிறது! ஆனாலும் - துணிச்சல்! இப்போது சும்மா வாய்த் துடுக்கு, அவ்வளவு தான்! அப்போது "தாய் வீடு போவேன்!" இப்போது "விவாகரத்துக்குச் செய்வேன்!" அது தான் வித்தியாசம்!

அன்றைய காலக்கட்டத்தில் கலைஞர் கருணாநிதி தான் ஆட்சியில் இருந்தவர். தமிழர்களுக்கு நிறைய ஊற்றிக் கொடுத்து அவர்களை நிரந்தர குடிகாரர்களாக ஆக்கியதில் இந்த பெருமகனாருக்குப் பெரும் பங்கு உண்டு! அதன் பிறகு வந்த எம்.ஜி.ஆர். அவர்களும் அவர்  பங்குக்குத்  தமிழர்களை தலைநிமிர முடியாத அளவுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனார்! அவர்கள் இருவரும் செய்த அந்தப் பெரும் தொண்டு இன்றுவரை  தமிழனை எழ முடியாமல் செய்து விட்டது!  இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூலம் இதற்கு ஏதும் தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அதே சமயத்தில் வடசென்னை மக்களை குடிகாரர்களாக ஆக்கியது மட்டுமல்ல இந்த மக்களை ரௌடிகளாக மாற்றியதும் இவர்களின் கட்சிகள் தாம்! பின்னர்  மக்கள் அவர்களைப் பார்த்து பயப்படும் அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டதும் அதே இரண்டு கட்சிகள்! அரசியல்வாதிகளின் அடியாட்களாக மாற்றியவர்கள் இவர்கள். பின்னர் வடசென்னையின் குத்துசண்டைக்குப் பதில் ரௌடிகளின் சண்டைக் கூடாரம் என்கிற பெயர் ஏற்பட்டுவிட்டது! இதற்கெல்லாம் காரணம் இந்த அரசியல் கட்சிகள் தான்!

இந்தப் படத்தின் மூலம் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அரசியல்வாதிகள் யாரையும் நல்லவர்களாக இருக்க விடமாட்டார்கள் என்பது தான் அது!

No comments:

Post a Comment