Wednesday 25 August 2021

வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா!

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதா? 

புதிய பிரதமர், இஸ்மாயில் சப்ரியின் நடவடிக்கைகளைப் பார்க்கிற போது அவர் அம்னோ கட்சியின் ஆலோசனையின் பேரில்  தான் இயங்குவார் என்றே தோன்றுகிறது!

அவரது ஆரம்பமே அம்னோ தரப்பிடன் கூடிக் குலாவுவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு முந்தைய அரசாஙத்தைக் கவிழ்த்தவர்கள் அம்னோ கட்சியினர் தாம்.

ஆனால் அவர்களுக்குக் காரியம் ஆக வேண்டி உள்ளது.  கொள்ளை அடித்தவர்களை வெள்ளை அடித்தவர்களாக மாற்ற வேண்டிய நிலையில் அம்னோ உள்ளது! அதற்காக அவர்கள் அல்லும் பகலும் வேலை செய்து வருகின்றனர்.  முந்தைய அரசாங்கத்தில் அது நடப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனைச் சாக்காக வைத்தே  அவர்களைக் கவிழ்த்தனர்.

இப்போது இஸ்மாயில் சப்ரி காலத்தில்,  காலம் கனிந்திருக்கிறது. அதனை நீண்ட காலத்திற்கு இழுத்துக் கொண்டு போக முடியாது. இழுத்துக் கொண்டு போனால் மீண்டும் வழுக்கிக் கொண்டு போய்விடும்! அதனால் உடனடியாகக் களத்தில் இறங்கிவிட்டனர்.

ஆனால் அம்னோ தரப்பு ஒன்றை மறந்துவிட்டது. நீங்கள் எதனை வேண்டுமானாலும் தவறான வழியில் சாதிக்க நினைக்கலாம். ஆனால் மறந்து விடாதீர்கள். நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதை கவனிக்க மறந்து விடாதீர்கள்.

உங்களுடைய ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படுகின்றது. மக்களால் கவனிக்கப்படுகின்றது. எதிர்கட்சியினரால் கவனிக்கப்படுகின்றது. அவ்வளது எளிதாய் நீங்கள் யாரையும் ஏமாற்றிவிட முடியாது! ஏன் மாமன்னரால் கூட உங்களைக் கண்காணிக்க முடியும்! சென்றமுறை போல கவிழ்த்து விடுவோம் என்கிற பயமுறுத்தலை இந்த முறை செய்ய முடியாது!

மக்கள் உஷாராக இருக்கிறார்கள். போனமுறை உங்கள் காரியம் நிறைவேறவில்லை. இந்த முறையும் அதே தான் நடக்கும்!  அந்த கவிழ்க்கின்ற வேலை இனி நடக்காது. அப்படியே நடந்தால் நீங்கள் மக்கள் மனதிலிருந்து முற்றிலுமாக நீக்கப் பெறுவீர்கள்! அதனை மறக்க வேண்டாம்!

மக்களை ஏமாளிகளாகவே எடை போடாதீர்கள். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. முந்தைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால் மக்கள் தான் பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இப்போது மீண்டும் அதே கதை, அதே வேதாளம் முருங்கை மரம் ஏறினால் என்ன ஆகும்?

அரசியல்வாதிகள் தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.  நீங்கள் அரசாங்கத்தைச் சோதிக்கவில்லை. மக்களைச் சோதிக்கிறீர்கள்! அதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இனி மேலும் மக்களைப் பொறுமை இழக்க வைக்காதீர்கள். எங்களுக்கு நல்லதொரு அரசாங்க வேண்டும். அதுவும் அடுத்த தேர்தல் வரை மட்டும் தான்! அப்போது, தேர்தல் வரும்போது, உங்களுடைய வீர தீரச் செயலைக் காட்டுங்கள்!

No comments:

Post a Comment