Wednesday 25 August 2021

நாய்களும் உயிர்கள் தானே!

 நாய்கள் மேல் பிரியமுள்ளவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள்!

நாய்கள் மேல் பிரியப்படுவதற்கு அந்த நாய்கள் உயர்ரக நாய்களாக இருக்க வேண்டும் என்கிற  அவசியமில்லை. அவை தெரு நாய்களாகக் கூட இருக்கலாம். சாதாரண வீட்டு நாய்களாகவும் இருக்கலாம். இங்கு ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை. அன்பு காட்டுவதில் நாய்களுக்கு நிகராக எதுவுமில்லை.

ஆனால் ஒரு சிலர் இந்த நாய்கள் மீது காட்டும் ஆர்வம் நம்மை வியக்க வைக்கிறது.அதே சமயத்தில் இந்த நாய்கள் இந்த மனிதர்கள் மீது காட்டும் அன்பும் நம்மை அதிசயப்பட வைக்கிறது!

தமிழ் நாட்டில் ஒரு பெண்மணி ஒரு நாளைக்கு  சுமார் 90 நாய்களுக்குச் சோறு போடுகிறார் என்றால் என்னவென்று சொல்லுவது! சொல்ல வார்த்தைகள் இல்லை!

அவர் வீட்டில் உள்ள நாய்கள்,  அவர் தெருவில் உள்ள நாய்கள், அடுத்த அடுத்த தெருவில் உள்ள நாய்கள் - இப்படி சுமார் 90 நாய்களுக்கு அவர் தினம் சோறு போடுகிறார்! அதாவது அவரே சமைத்து அந்த நாய்களுக்குச் சோறு போடுகிறார்!

சமையல் என்றால் சும்மா அலட்சியமாக நாய் சமையல் என்று நினைத்து விடாதீர்கள். ஒரு நாளைக்குப் பத்துக்  கோழிகளைச் சமையலுக்குப் பயன் படுத்துகிறார். அதில் பால், தயிறு என்று செர்த்துக் கொள்கிறார். அதன் சுவை  நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கவன செலுத்துகிறார். அவர் திருப்தி அடைந்த பின்னர் தான் நாய்களுக்குத்  தெரு தெருவாகப் போய் விருந்து பரிமாறுகிறார்!

ஆமாம், ஒரு சிலர் இந்தக் கோவிட்-19 காலக்கட்டத்தில் மனிதனுக்கே சாப்பாடு இல்லை நாய்களுக்கு இப்படியும் சாப்பாடா! என்று அங்கலாய்ப்பது நமது காதுக்கும் எட்டுகிறது! என்ன செய்வது? நாய்களைத்தானே நன்றியுள்ள பிராணி என்கிறோம்! மனிதனுக்கே சாப்பாடு இல்லையென்கிற போது இந்த நன்றியுள்ள பிராணிகளை மறந்துவிட முடியுமா? அவைகளுக்கும் சாப்பாடு போட ஆளில்லையே! போடுகிறவர்கள் போடட்டும்! அவைகள் ஏன் சாக வேண்டும்?

இப்படி தெரு நாய்களுக்குச் சாப்பாடு போடுபவர்கள் அவைகளை நாய்களாக நினைப்பதில்லை. தங்களின் குழைந்தகளாகவே நினைக்கின்றனர். ஏன்? நாய் என்கிற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை! அந்தளவு அந்த நாய்களின் மீது பாசம் வைத்திருக்கின்றனர்!

நாய் மனிதர்களின் தோழன். சமீபத்திய செய்தி ஒன்று. மூன்று இலட்சம் ரூபாய்  பணம் சேமிப்பில் வைத்திருக்கும் தாயிடம், அந்தப் பணத்தைத் தனக்குத் தர வேண்டும் என்று மகன் நடுரோட்டில் வைத்து தாயை அடிக்கிறான். அந்த நேரத்தில் அவர்களின் வீட்டு நாய் அந்த மகனைக் கடிக்கப்  பாய்கிறது! மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்கின்றனர்! நாய் எதிர்க்கிறது! அதுக்கும் தாய்ப்பாசம் உண்டு!

நாய்களும் உயிர் வாழட்டும்! விருப்பமுள்ளவர்கள் அவைகளுக்குச் சாப்பாடு போட்டு மகிழட்டும்!  வாயில்லா ஜீவன்! வாயுள்ள ஜீவன்! இருவருக்கும் உள்ள உறவு அன்பு தான்!


No comments:

Post a Comment