Monday 9 August 2021

தமிழகக் கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை!

 தமிழகக் கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பது நல்ல செய்தி என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல எந்த சமூகத்தினரும் அர்ச்சராகலாம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

தமிழ் நாட்டில் "தமிழில்" என்று சொல்லும் போது "அட! இத்தனை நாளா தமிழில் இல்லையா!" என்று ஆச்சரியப்படுவோரும் உண்டு. ஆமாம்! அது தான் உண்மையான நிலை! மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து கடைசியில் அவன் மொழி கூட அவனுக்கு இல்லாமல் போயிற்று!

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்பது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். ஆனால் அது நீடிக்கவில்லை. ஜெயலலிதா வந்ததும்  தானாக தமிழ் மறைந்து போனது!

ஆனால் இப்போது ஸ்டாலின் பதவிக்கு வந்திருக்கிறார். இது தொடரும் என நம்பலாம். இனி பாப்பாத்தி யாரும் வருவதாக இல்லை!  ஆனாலும் எடப்பாடி பதவிக்கு வந்தால் ஒரு வேளை அவர் அம்மாவைப் பின்பற்றினால்  மீண்டும் ஆப்பு!  எடப்பாடிக்குத்  தமிழோ, தமிழனோ  சோறு போடவில்லை அம்மா தான் சோறு போட்டார்!  அவருக்கு அது செஞ்சோற்றுக்கடன்!

தமிழில் அர்ச்சனை நீடீக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனால் தமிழர்களிலேயே, சிவாச்சாரியார்களில் ஒரு பிரிவினர், தமிழில் வேண்டாம் என்பவர்களும் உண்டாம். எங்கே முட்டிக் கொள்வது!

மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து: கடவுளுக்குத் தமிழ் மொழி விளங்கும் என்பது தான். தமிழ் மட்டும் அல்ல கடவுளுக்கு உலகில் உள்ள அத்தனை மொழிகளும் விளங்கும். சமஸ்கிருதம் மட்டும் தான் விளங்கும் என்றால் அவர் கடவுள் அல்ல பசுத்தோல் போர்த்திய புலி!

இந்த நேரத்தில் மேலும் ஒன்று. தமிழ் மொழியில் அர்ச்சனை என்றதும் அதனைக் காலங்காலமாக எதிர்த்து வரும் கும்பல்  உடனே அதனைத் தடுக்க தனது வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடும்! அவர்கள் செய்கின்ற வேலைகள் நேரடியாக இருக்காது. எல்லாம் மறைமுக வேலைகள்! ஜாதி பிரச்சனையை உருவாக்குவார்கள். தமிழர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கின்ற வேலையைச் செய்வார்கள். அதற்கான காரணமும் தமிழில் அர்ச்சனை செய்வது  தான் என்பார்கள்!

இப்படிப் பல தடைகளைக் கடக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அரசாங்கம் மக்களோடு இருக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்வதை மக்கள் ஏற்றுக் கொண்டால் அதன் பின்னர் எந்த மொழியும் எதுவும் செய்ய முடியாது!

தமிழ் சினிமா கூட தமிழனுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. சமஸ்கிருதத்தில் வழிபாடு, சமஸ்கிருதத்தில் திருமணம், பிராமணன் உயர்ந்தவன் -  இப்படியே காட்டிக் காட்டி சமஸ்கிருதத்தையும் பிராமணனையும்  உயர்த்திப்பிடிக்கிறது!  

இப்படி எல்லாக் காலங்களிலும் தமிழர்களுக்கு எதிராக தமிழ் நாட்டிலேயே தமிழ் மொழி மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்பது இது தானோ?

தமிழில் அர்ச்சனை என்பது நல்ல செய்தி! அது காலங்காலத்திற்கும் தொடர வேண்டும் என்பது நமது செய்தி!

No comments:

Post a Comment