Friday 12 August 2016

நானாக நானில்லை.....!


நமக்கென்று ஓர் அடையாளம் உண்டு. நாம் நாமகவே இருக்க விரும்புகிறோம்.

ஆனாலும் நாம் விரும்பியபடி நம்மால் இருக்க  முடியவில்லை. வேலை என்று ஒன்று வந்தவிட்ட பிறகு நம்முடைய சுயத்தன்மையை இழந்து விடுகிறோம்!

நாம் வேலை செய்கின்ற இடத்திற்கு ஏற்ப நம்முடைய உடைகள் அணியப்பட வேண்டும். அது தான் நடமுறை. குறிப்பாக அரசாங்கப் பணியாளர்கள், காவல்துறை,ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் உடைக் கோட்பாடு உள்ளது. தனியார் நிறுவனங்களில்  கீழ் இருந்து மேல்வரை உள்ள ஊழியர்கள் ஒரே வித சீருடையை அணிகின்றனர்.

எல்லாமே ஒர் ஒழுங்கு, ஓர் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த அணுகுமுறை.

இல்லாவிட்டால் என்ன நடக்கும்? தோடு, தொங்கட்டான், நீண்ட கூந்தல் என்று அலுவலகங்களே கலகலத்துப் போகும்! ஆணா, பெண்ணா என்று கூட தெரியாமல் போகும்!

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அரசாங்கத்தில் பணி புரிந்தவர். எப்போதும் டை கட்டி, கம்பீரமான உடை அணிந்து  அலுவலகத்துக்கு வருபவர். அவர் பணி ஒய்வு பெரும் வரை அவர் அப்படித்தான் இருந்தார். அதுவரை எந்த மாற்றமும் இல்லை. பணி ஒய்வு பெற்றார். இப்போது தனது  மகனுடன் சேர்ந்து அவருக்குத் துணையாக மகனின் தொழிலில் உதவியாளராக இருக்கிறார். ஆனால் அவரின் உண்மையான அடையாளம் இப்போது தான் வெளியே வருகிறது!  நீண்ட கூந்தல் - தாராளமாக சடை போடாலாம் - காதுகளில் கடுக்கன், லொட-லொட சிலுவார் -   அடாடா.... ஆளே மாறிப் போனார்! அது தான் அவர்! ஏன் இப்படி மாற்றம் என்று கேட்டால்: நான் நானாக  இருக்கிறேன் என்கிறார்! பாவம்! இத்தனை ஆண்டுகள் அவர் அவராக இல்லை!

சராசரியாக நமது இளைஞர்களைப் பார்க்கும் போது நமக்குக் கோபம் வருகிறது. நீண்ட தலைமுடி, இல்லாவிட்டால் மொட்டை, கடுக்கன். தலையிலேயே "கபாலி" முடிவெட்டு, என்று செய்கின்ற அட்டுழியங்கள் நம்மைக் கோபப்பட வைக்கிறது! ஆனால் உண்மை அதுவா? இல்லை! அது நமது பொறாமையின் வெளிப்பாடு! நம்மால் முடியவில்லையே என்னும் கோபம் நம்மை அப்படிப் பேச வைக்கிறது! நாம்  நாமாக இருக்க முடியவில்லையே என்னும் ஆதங்கம்!  'அவர் என்ன சொல்லுவார்! இவர் என்ன சொல்லுவார்!' என்னும் பயம் நம்மை அடக்கி வைக்கிறது! உண்மையாகச் சொன்னால்: நான் அவனில்லை!

காவல்துறையில் பணிபுரிந்த ஓரு மலாய் நண்பபரைத் தெரியும். எப்போதும் ஒரு கோபப்பார்வை, கம்பீரமான நடை மற்றவர்கள் பயப்படும்பபடியான ஒரு தோற்றம். சில மாதங்களுக்கு முன் ஓய்வுப் பெற்றார். இப்போதோ அனைத்தும் தலைகீழ் மாற்றம்! தலையில் ஒரு தொப்பியைப் போட்டுக்கொண்டு, நீண்ட முடியை வளர்த்துக் கொண்டு, காலில் சிலிப்பரைப் போட்டுக்கொண்டு அஞ்சடிக்காரன் மாதிரி வந்துபோய்க் கொண்டு இருக்கிறார்! 'இது தான் நான்' என்கிறார்!

நாம் அனைவருமே அப்படித்தான்! நாம் நாமாக இருக்க முடியவில்லை! யார் என்ன சொல்லுவார்களோ என்கிற பயம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது! அல்லது கோபப்பட வைக்கிறது! இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!

ஒன்று செய்யலாம். வேலையில் இருக்கும் போது: நான் நானாக இல்லை! வேலை முடிந்த பிறகு: நான் அவனில்லை! என்று இரட்டை வேடைத்தில் நடிக்கலாம்! உங்கள் வசதி எப்படி?


No comments:

Post a Comment