Saturday 11 March 2017

தொட்டால் துலங்கும்..!

தொட்டது துலங்கும்; நட்டது தழைக்கும்; ஒன்று நூறாகும்!
தொட்டால் பூ மலரும்! தொட்ட இடம் பூ மணக்கும்!

இப்போது சொல்லுங்கள். நீங்கள் தொட்டது துலங்குமா? நட்டது தழைக்குமா? ஒன்று நூறாகுமா? தொட்டதும்  பூ மலருமா? தொட்ட இடம் பூ மணக்குமா?

இவை அனைத்தும் உங்களிடமிருந்தால் நீங்கள் தான் அந்தத் தொட்டால் துலங்கும் என்று சொல்லப்படுகின்ற அந்த மனிதர். தொட்டால் துலங்கும் என்பது எங்கோ இல்லை. இதோ! இந்த நிமிடம்  அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை!

ஆனாலும்,  'நான் தொட்டது எங்கே துலங்குகிறது?' என்று சொல்ல வருகிறீர்களா? இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்! ஆனால் இருக்க வேண்டும். அது தான் இங்கே நாம் சொல்ல வருவது.

ஒருவரைப் பார்த்து நாம் கைராசிக்காரர் என்கிறோம். இன்னொருவரைப் பார்த்து ராசியே இல்லாத ஜென்மம் என்கிறோம்!

கைராசிக்காரர் என்றால் அவர் தொட்டது துலங்கும் என்பது தான் அர்த்தம்.

கைராசி என்பது, தொட்டது துலங்கும் என்பது தான். நாம் தொட்டது ஏன் துலங்கவில்லை? ஒன்றுமில்லை, நாம் ராசியில்லாதவன் என்று அழுத்தமாக  நம் மனதில் நாம்  விதைத்து விட்டோம்! விதை எங்கிருந்து வந்தது? நமது பெற்றோரிடமிருந்து வந்திருக்கலாம். தாத்தா, பாட்டியிடமிருந்து வந்திருக்கலம். சுற்றுப்புறங்களிலிருந்து வந்திருக்கலாம்.    

நாலு பேர் சேர்ந்து நீங்கள் ராசி  உள்ளவன் என்றால்   நீங்கள் ராசி உள்ளவர்.தான். இல்லை என்றால் இல்லை!  உள்ளது என்றால் உள்ளது தான்!

இந்த ராசி இல்லாதவன் என்னும் பெயர் எங்கிருந்து வருகிறது? பெரும்பாலும் நமது குடும்பங்களிலிருந்து வருவது தான். ஒரு நண்பரைத் தெரியும். தனக்கு ராசி இல்லையென்று தனது மகனிடன்  நான்கு நம்பர் லாட்டரி வாங்கி  வரச்  சொல்லுவார்.   நம்பர் அடிக்கவில்ல் என்றால் 'சே! தரித்திரம் பிடித்தவனே!' என்று அவனைத் திட்டுவார்!  சும்மா இருந்தவனை நம்பர் வாங்கச் சொல்லி பிறகு அவனுக்குத் தரித்திரம் பிடித்தவன் என்று அவனுக்குப் பட்டம்! குழந்தை பிறந்த போது அம்மா இறந்து போனால் உடனே ராசி இல்லாத குழந்தை என்று முத்திரைக் குத்தப்படும்.  அம்மா  நல்லவள். அதனால் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார் என்று எடுத்துக் கொள்ள நாம் பழக வேண்டும். குழந்தை மீது பழி போடக்கூடாது.    

ராசி இல்லாதவன், இவன் தொட்டால் துலாங்காது என்பன போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற வார்த்தைகள் அந்த மனிதன் சாகும் வரை அவனோடு ஒட்டிக் கொள்ளும்.

இதனைப் போக்குவது எப்படி? பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. "நாம் தொட்டால் துலங்கும்" என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுவது தான். நாம் எதனைச் செய்தாலும் "நான் ராசிக்காரன், நான் தொட்டால் துலங்கும்" என்று மனதில் நினைத்துக் கொண்டே நமது செயல்களைச் செய்ய வேண்டியது தான்! அது தான் சரியான வழி! நீங்கள் தொடர்ந்து இப்படி மந்திரம் போல சொல்லிக் கொண்டு வந்தால் பிறரும் உங்களை ராசிக்காரன் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்!  ஆழமாகப் பதிந்துவிட்ட 'துலங்காது!' என்பதை 'துலங்கும்!' என்று சொல்லிச் சொல்லி அந்த துலங்காது என்பதை தகர்த்தெறிய வேண்டும்! இது முடிகின்ற காரியம் தான். முடியும்!

நாம் தொட்டது துலங்கும்!

No comments:

Post a Comment