Tuesday 7 March 2017

செத்தா, ஐந்து இலட்சம்...!


மீனவன் கொல்லப்பட்டால் அவனுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் நிவாரணம். அதே மீனவன் சுடப்பட்டு காயமடைந்தால் ருபாய் ஒரு இலட்சம் நிவாரணம்.

ஆமாம், தமிழக அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது?

 இலங்கை கடற்படையினர் சுட்டால் சுடட்டும். சுட்டுப் பழகுவதற்கு அவர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை. இந்த மீனவர்களை விட்டால் அவர்கள் எங்கு தான் போவார்கள்? சிங்களவர்களைச்  சுட முடியாது. சுட்டால் அந்த நாடே கிளர்ந்து எழும். அதனால் தமிழக மீனவர்களைச் சுடுவது மிகவும் பாதுகாப்பானது. அதனால் ராஜாக்களா நீங்க சுடுங்கப்பா! எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை! அவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து நாங்க சரி பண்ணி விடுகிறோம்! அவன் ஒரு இலட்சத்தை எந்தக் காலத்திலும் பார்த்ததில்ல! அதனால நீங்க எப்போதும் போல செய்யிறத செய்யுங்க! நாங்க கண்டுக்க மாட்டோம்! நாங்க ஒப்புக்கு மத்திய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் போடுவோம்!  அவன்களும் கண்டுக்க மாட்டன்க!

இப்படித்தான் இந்தப் பிரச்சனையைக் கையாள்கிறது தமிழக அரசு. இந்திய அரசாங்கமோ இது இந்தியர் பிரச்சனை இல்லை, தமிழ் நாட்டு பிரச்சனை; அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று நினைக்கிறது!


நீண்ட நாள் பிரச்சனை. ஆண்டுக் கணக்கில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையைக் கையாளத் தெரியாத ஒரு கையாளாகாத அரசாங்கம். ஒன்றா, இரண்டா? திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை!

கலைஞர் தமிழ்ப்பண்டிதர். அவரால் தீர்க்க முடியவில்லை. ஜெயலலிதா இந்திய அரசியலில் ஆங்கிலத்தில் கலக்கியவர். ஊகூம்..! இவர்களின் படிப்பு தமிழ் நாட்டுக்கு உதவவில்லை!  இப்போது உள்ளவர்கள்...?  இவர்கள் இரண்டும் கெட்டான்கள்! நினைத்த நேரத்தில் 'தொப்' பென்று காலில் விழக்கூடியவர்கள்! சிங்களவன் பணம் கொடுத்தால் அவன் காலிலும்  சரண்!

ஒ! தமிழா! உன் நிலை இப்படியா ஆக வேண்டும்?  தகுதியே இல்லாதவனுக்கெல்லாம் வாக்களித்து வாழ வைத்தாய். இன்று  அவன் நீ குடித்து அழித்த சாராயாக்காசையே எடுத்து ஒரு இலட்சம், ஐந்து இலட்சம் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறான்! உன் வாழ்க்கையை மட்டும் அல்ல, மொத்த தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையையே வாட வைத்துவிட்டான் வாடகைக்கு வந்தவன்!

வரும்! வாழ்க்கை வரும்! வளருவான் தமிழன்! வாழ்வாங்கு வாழ்வான் தமிழன்! நிச்சயம் தலை நிமிர்வான்!

No comments:

Post a Comment