Wednesday 8 March 2017

கிறிஸ்துவ மறை போதகர் கடத்தப்பட்டார்!


சமீபத்தில் சவுதி அரேபிய மன்னர் தனது குடும்பத்தினருடன் நமது நாட்டிற்கு வருகை புரிந்திருந்தார். நாம் அனைவரும் அறிந்த செய்தி தான்.

ஆனால் அவரும் அவர் குடும்பத்தினரும் இங்கிருந்த போது ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல்  நடத்த திட்டம் தீட்டியிருந்தாக நாம் எதிர்பார்க்காத - அதிர்ச்சிகரமான - செய்தியை வெளியிட்டிருக்கிறார் போலிஸ் படைத் தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர். எனினும் காவல்துறையினர்  அவர்களின் திட்டத்தை முறியடித்திருக்கின்றனர். இதன் தொடர்பில் காவல்துறையினரால் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த ஏழு பேரில் நால்வர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள், இருவர் இந்தோனேசியர்கள், ஒருவர் மலேசியர்.

உள்ளூரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த தீட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் சாதாரணமாக விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த நேரத்தில் கிறிஸ்துவ மத போதகர் ஒருவர்கடத்தப்பட்டிருப்பதானது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேல் நமக்கும் ஒரு சந்தேகத்தை ஏற்படத்தத்தான் செய்யும்.

மிகவும் சரியாகத் திட்டமிட்டு இந்த கடத்தல் நாடகம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் பகல் நேரத்தில் மிகவும் நெருக்கடியான போக்குவரத்து உள்ள நெரிசல்  சாலையில்.இந்தக் கடத்தல் சம்பவம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அவர் காரில் பயணம் செய்த போது ஏழு வாகனங்கள், இரண்டு மோட்டார் வண்டிகள் அவரைப் பின் தொடர்ந்திருக்கின்றன. முன் சென்ற மூன்று வாகனங்கள் அவரது காரை வழிமறித்து ஏறக்குறைய ஒரு நாற்பது வினாடிகளில் இந்தக் கடத்தல் நாடகத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பறந்துவிட்டன! மிகவும் துல்லியமாக - ஒரு இராணுவ  நடவடிக்கை போன்று - இந்தக் கடத்தல் சம்பவம் இருப்பதாக அதன் காணொளியைப் பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள்.

இப்போது ஒரு மாதம்  ஆகிவிட்ட நிலையில் ஒரு கிறிஸ்துவ சபையைச் சேர்ந்த மதபோதகரான ரேமன் கோ என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்று ஒன்றும் அறியாத நிலையில் அவரின் மனைவி, பிள்ளைகள் அவரது சபையைச் சார்ந்தவர்கள் கிறிஸ்துவ திருச்சபையினர் அனைவரும் அவரின் பாதுகாப்புக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

ரேமன் கோ-வைப் பற்றிப் பேசும் போது அவர் மிக நல்ல மனிதர், பரமச் சாது என்பதாகத்தான் சொல்லப்படுகிறது. அவரைக் கடத்துவதற்கு இந்த அளவு கெடுபிடிகளோடு - ஒரு இராணுவ நடவடிக்கை - போன்று செயல்பட்டது மிகவும் அநாகரீகம் என்றே தோன்றுகிறது!

ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் நாகரீகம், அநாகரீகம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. மனிதமும் கிடையாது மனிதாபிமானமும் கிடையாது!  சொன்னதைச் செய்கின்ற கிளிப்பிள்ளைகள்! மற்றபடி அறிவைப் பயன்படுத்தும் கூட்டம் அல்ல.

இதனை ஏன் நாம் ஐ.எஸ். ஸைக் குற்றம் சொல்லுகின்றோம் என்றால் அவர்களின் ஊடுருவல் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வ்ருகிறது என்பதை காவல்துறைத் தலைவரின் அறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது,

ரேமன் கோ நலனே திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment