Friday 31 March 2017

காலணியில் புனித வாசகங்கள்!


நமது நாட்டில் நடைபெறுகின்ற சில விஷயங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன! நாம் என்ன முட்டாள்களா என்று நினைக்கத் தோன்றுகிறது!

ஒரு சிறு பிரச்சனையைக் கையாளக்கூட தகுதியள்ளவர்கள் அரசாங்கத்தில் இல்லையோ என்று நமது புருவங்களை உயர்த்த வேண்டி உள்ளது!

காலணிகளில் கடவுளின் படத்தை அச்சிடப்படுவது என்பது நம் நாட்டில் தொடர்ச்சியாக  நடைபெறுகின்ற ஒரு விஷயம். இது பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது.

அது தவறு என்று சொல்லக்கூடிய தகுதி அரசாங்கத்தில் யாருக்குமே இல்லை! அதற்கு ஒரே காரணம் அது பெரும்பாலும் இந்துமதக் கடவுளாக இருப்பதால் தான்!

நமது நாட்டின் - முதல்  தேசியக் கோட்பாடே -  இறைவனை மீது நம்பிக்கை வைத்தல். அரசாங்கத்தில் பணி புரிவோர் - குறிப்பாகச் சமயம் சார்ந்த இலாக்காக்கள்   -  பணி புரிபவர்கள் நமது தேசியக் கொள்கைகளைப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இங்குப் பணிபுரிவோர் "இஸ்லாம்" என்று சொல்லும் போது தான் தூக்கத்திலிருந்து விழித்து எழுவது போல் துள்ளி எழுகிறார்கள்!

இந்து மதம், கிறித்துவ மதம், பௌத்த மதம்  - இந்த மதங்களெல்லாம் தீடீரென்ற்று நேற்று முளைத்த மதங்கள் அல்ல. அவைகளுக்கு மட்டும் தான் இந்த மலேசிய மண்ணில்  நீண்ட பாரம்பரியம் உண்டு.

இந்து மதத்தை எத்தனையோ முறை இழிவுபடுத்தி காலணிகளில் இந்து தெய்வ உருவங்கள் வெளி வந்திருக்கின்றன. அப்போது அரசாங்கத் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனை ஒரு சிலர் கேலிப் பொருளாகத்தான் பார்த்தனர்.  ஆனால் தொடர்ச்சியாக  மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்ததினால் ஏதோ "போனால் போகட்டும்" என்று அரசு தரப்பு நடவடிக்கை எடுத்தது.

ஆனாலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கத்தால் முடியவில்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.  தொடர்வதற்குக் காரணம் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. ஒரு மேம்போக்கான நடவடிக்கைக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை!

ஆனால் இப்போது நடப்பது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்! இப்போது காலணிகளின் மேல் இஸ்லாமிய புனித வாசகங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன!  ஏதொ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தெரிகிறது. சரியான நடவடிக்கை இல்லையென்றால் இது தொடரத்தான் செய்யும்.

இஸ்லாம் மட்டும் அல்ல. எந்த மதமாக இருந்தாலும் சரி புனித வாசகங்களையோ, கடவுள் படங்களையோ இது போன்று காலணிகளில் வெளிவரும் போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு பாகுபாடு, ஒரு சட்டம் என்று வரும் போது இது போன்ற செயல்களை நிறுத்திவிட முடியாது.

நமது நாட்டின் தேசிய கோட்பாட்டில் முதல் கோட்பாடே "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்" என்பதை சம்பந்தப்பட்ட இலாகாவினர் புரிந்து கொள்ள வேண்டும். அது இஸ்லாமிய இறைவன், கிறித்துவ இறைவன், இந்து இறைவன்,பௌத்த இறைவன் என்று சொல்லப்படவில்லை. இறை நம்பிக்கை என்பது தான் தலையாயது.

வருங்காலங்களிலாவது அலட்சியத்தோடு செயல்படுவதை சமய இலாகாவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இனி இது போன்ற செயல்கள்  நடவாது பார்த்துக் கொள்வது அவர்களின் கடமை!

No comments:

Post a Comment