Saturday 25 March 2017

பெருமைப் படுங்கள்!


பெருமைப் படுங்கள்!  அனைத்துக்கும் பெருமைப் படுங்கள்!

நண்பன் ஒருவன் வெற்றி பெற்றால் பெருமைப் படுங்கள். பொறாமைப் படாதீர்கள். தேர்வில் வெற்றி பெற்றானா, அவனை பற்றி பெருமைப் படுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள். பொறாமைப் படாதீர்கள்.

தமிழன் ஒருவன் வியாபாரத்தில் வெற்றி பெற்றனா? பெருமை படுங்கள். அவன் வெற்றி பெற்று விட்டானே, என்னால் வெற்றி பெற முடியவில்லையே என்று பொறாமை படாதீர்கள்.

எந்தத் துறையாயினும் ஒரு தமிழன் வெற்றி பெற்றால் அவனைப் பற்றி பெருமை படுங்கள்,  பொறாமை படாதீர்கள்.

பிறர் வெற்றியடையும் போது நீங்கள் அவர்களைப் பற்றி பெருமை அடைந்தால் நீங்களும் பெருமை அடைவீர்கள். அதற்குப் பதிலாக பொறாமைப் பட்டால் நீங்கள் அழிவை நோக்கிச் செல்லுகிறீர்கள் என்பது பொருள்.

மற்றவர்களின் வெற்றியில் நாம் பெருமைப் படும் போது நமக்கும் அவர்களின் வெற்றி ஒட்டிக் கொள்ளும். பொறாமைப் படும் போது வெற்றியை நம்மிடமிருந்து நாமே விரட்டியடிக்கிறோம்!

நமக்குத் தெரிந்த நண்பன் நாலு பேர் மெச்ச ஒரு நல்ல காரியம் செய்தால் அவனைப் பற்றி பெருமை படுங்கள். முடிந்தால் அவனை நேரடியாகவே பாராட்டுங்கள். அப்படியே அவனைப் பாராட்ட மனம் வரவில்லை என்றால் உங்கள் மனதிலேயே பராட்டிக் கொள்ளுங்கள். நம்மால் முடியாததை நமது நண்பன் செய்கிறானே அது பெருமைப்படக் கூடிய விஷயம் தானே!

சிலருக்குப் பாராட்டுவது, பெருமைப்படுவது போன்றவை கொஞ்சம் அந்நியமான விஷயங்கள்!  எதை எடுத்தாலும் பொறாமை தான் முன்  நிற்கும்!

பொதுவாக தமிழர்களுக்கு ஒரு விசேஷமான குணம் ஒன்று உண்டு. ஒரு தமிழன் முன்னேறுவதை இன்னொரு தமிழன் விரும்பவதில்லை. சித்தப்பா மகன் முன்னேறுவதை பெரியப்பா மகன் விரும்பமாட்டான்! பெரியப்பா மகள் சிறப்பாக பாடங்களில் தேர்ச்சி பெற்றால் சித்தப்பா மகள் பொறாமைப் படுவாள்! இதற்கெல்லாம் வீட்டிலுள்ள தாய்மார்கள் தான் காரணம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது! குடும்பங்களில் உள்ள சிறு, சிறு பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக்கி பிள்ளைகளிடையே பொறாமைக் குணத்தை வளர்த்து விடுகிறார்கள் என்பதாகத்தான் நான் நினைக்கிறேன்! இப்போது இதுவே தமிழர்களிடையே ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது!

ஒரு தமிழனின் முன்னேற்றம் நமக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறதே தவிர அவனின் முன்னேற்றத்தைப் பற்றி நாம் பெருமைப் படுவதில்லை. அவனைப் பாராட்ட வேண்டும் என்னும் மனப்பக்குவம் நமக்கு ஏற்படுவதில்லை!

ஆனால் இப்போது இது மாறிவருகிறது என்பதால் மகிழ்ச்சி அடையலாம். இப்போது நாம் தமிழர் என்கிற உணர்வு மேலோங்குகிறது என்பது உண்மை. இது தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஒரு சகத் தமிழனின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெருமைப் படுங்கள். அவனைப் பாராட்டுங்கள். அவனை வாழ்த்துங்கள். அவன் மீது பொறாமைப்பட்டால் நமது பெருமை கீழ் நோக்கிப் போகும். நமது நிலை தாழ்வடையும். நட்டம் நமக்கே!  அதற்குப் பதிலாக நாம் பாராட்டினால் நாம் பாராட்டப்படுவோம்! பெருமைப் படுத்தினால் நாமும் பெருமைப் படுத்தப்படுவோம்!

ஒருவருக்கொருவர் பாராட்டுவோம்! பெருமைப் படுவோம்! சகத் தமிழனின் முன்னேற்றம் நமது இனத்தின் முன்னேற்றம்! தமிழர்களின் முன்னேற்றம்!

வாழ்க தமிழினம்!

No comments:

Post a Comment