Thursday 4 May 2017

வயதானால் என்ன? உடற்பயிற்சி அவசியம்!


உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் என்னும் வரைமுறையெல்லாம் ஒன்றுமில்லை! மனிதனின் உடல் இயக்கங்களில் பிரச்சனைகள் இல்லாதவரை உடற்பயிற்சி அவசியம் தேவை. வயது வித்தியாசங்களினால் அல்லது நோய்களின் தாக்கங்களால் குறைத்துக் கொள்ளலாம் அல்லது கூட்டிக்கொள்ளலாம்./ ஆனால் ஏதோ ஒரு வகையில் பயிற்சியைத் தொடருங்கள்.

இன்று காலை ஒரு மலாய்ப் பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது. அவரை முன்பும் பார்த்திருக்கிறேன். இன்று கொஞ்சம் அருகில் பார்க்க நேர்ந்தது.

காலை நேரத்தில் அவர் சைக்கிளில் வலம் வருவார். வயது..? அவரின் முகச் சுருக்கங்களை வைத்துப் பார்க்கும் போது கிட்டத்தட்ட எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதாகத்தான் இருக்க வேண்டும்.  கருப்புக் கண்ணாடி ஒன்றை அணிந்திருப்பார், ஒரு வேளை "காட்டரேக்" ஆகக் கூட  இருக்கலாம்.

ஆனால் பாட்டி மிகச் சுறுசுறுப்பானவர்  எப்படிப் பார்த்தாலும் ஒரு மணி நேரமாவது அந்தச் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருப்பார்! அவரின் வயதை ஒத்தவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை! இந்த வயதிலும் அவர் இப்படிச் சுறுசுறுப்பாக இயங்குகிறாரே என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

இன்னொரு தமிழ் அன்பரைத் தெரியும். இவருக்கு "ஹார்ட்  அட்டாக்" வந்து ஒரு பக்கத்துக் காலும் ஒரு பக்கத்துக் கையும் பாதி செயல் இழந்தவர். தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று ஒய்ந்திருக்கவில்லை; ஒப்பாரி வைக்கவுமில்லை!  தினசரி நடைப்பயிற்சி செய்வார். கையில் கனமாக எதையோ  கட்டிக் கொண்டு அதனைத் தூக்கிக் கொண்டே பயிற்சி செய்வார்! ஒரு நாள், இரு நாள் அல்ல! தொடர்ந்து சில ஆண்டுகள் தொடர் பயிற்சி. சமீபத்தில் அவரை நான் பார்க்க நேர்ந்த போது அவர் நம்மைப் போலவே எவ்விதத் தடங்களுமின்றி  நடக்கிறார்.கைகள் சரளமாக இயங்குகின்றன.

நாம் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி - அதுவும் நோயினால் பாதிக்கப்பட்ட்டிருந்தாலும் சரி - நம்மால் முடிந்தவரை சிறு சிறு பயிற்சிகளையாவது  நாம் செய்யப்பழக வேண்டும். நமது  உடம்பு ஒத்துழைத்தால் பெரிய பெரிய பயிற்சிகளைப் பற்றி பின்னர் யோசிக்கலாம். ஆனால் கடுமையானப் பயற்சி என்றால் டாகடரின் ஆலோசனையை நாடுங்கள்>

மற்றபடி எளிய பயிற்சிகள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி இவைகள் எல்லாம் நமது உடம்பை ஆரோகியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

பயிற்சி செய்வோம்! பயனடைவோம்!
                        

No comments:

Post a Comment