Friday 12 May 2017

இந்தியர்களுக்கு இன்னொரு அரசியல் கட்சி..!


மலேசிய இந்தியர்களுக்காக புதிய அரசியல் கட்சி  ஒன்று உதயமாகிறது!

இந்த முறை களத்தில் இறங்குபவர் ஹின்ராஃப் பி.வேதமூர்த்தி.  ஏற்கனவே இந்தியர் என்று பெயர் தாங்கி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு ஒரு சில கட்சிகள். அதே சமயத்தில் இந்தியர் பெயர் தாங்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் - ஆனால் அரசில் பங்கு பெற இயலாத - இன்னும் சில கட்சிகள்!

நமது நாட்டில் இந்தியர்களுக்காக ஏகப்பட்ட அரசியல் கட்சிகள், ஏகப்பட்ட தமிழ் தினசரிகள், ஏகப்பட்ட அரசு சாரா இயக்கங்கள் இன்னும் ஏகப்பட்ட, ஏகப்பட்ட  நிறையவே இருக்கின்றன!

இவைகள் எல்லாம் சேர்ந்து தான் இப்போது இந்தியர்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களை ஒரு இஞ்சி கூட நகர விடாமல் அவர்களை அப்படியே  அந்த நிலையிலேயே வைத்திருக்கின்றன!

ஆனால் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒரு லாபம் உண்டு. அவர்களுக்கு அரசாங்க மானியம் கொஞ்சம் தாரளாமாகவே கிடைக்கின்றன. அதனால் ஏதோ அவர்களின் பிள்ளைகுட்டிகள் கொஞ்சம் தாரளமாக இருக்கின்றனர்! அத்தோடு சரி! பரவாயில்லை, அவர்களும் இந்தியர்கள் தானே!

ஹின்ராஃப் இயக்கத்தின் ஆரம்பம் மிகவும் கடினமான ஒரு பணி. எங்கெங்கெல்லாம் இந்து கோவில்கள் உடைக்கப்பட்டனவோ அங்கெல்லாம் அவர்கள் இருந்தார்கள். சில தடுக்கப்பட்டன.  சில நொறுக்கப்பட்டன! வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  மிகப்பல அநியாங்களை எல்லாம் தட்டிக் கேட்டார்கள். ஆளுங்கட்சியில் இருந்தவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்த போது ஹின்ராஃப் மட்டும் தான் வாய் திறந்து அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இந்தியர்களிடையே அவர்களுக்கு நல்லதொரு மரியாதையும் மதிப்பும், வரவேற்பும்  இருந்தது என்பது உண்மை. அதனை வைத்தே கோலாலம்பூரில் ஒரு மாபெரும் பேரணியை  அவர்கள் நடத்தினார்கள்!  மலேசியா கண்டிராத பேரணி அது! நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்த பேரணி அது!

ஆனால் இப்போது இந்தியர்களின் ஆதரவு ஹின்ராஃப் இயக்கத்திற்கு  எந்த அளவில் உள்ளது  என்று  பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது!

சில ஆண்டுகளுக்கு முன்னர் வேதமூர்த்தி துணை அமைச்சராக நாட்டின் அமைச்சரவையில் இருந்தவர். இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை வைத்திருந்தவர்> ஆனாலும் அவரது திட்டங்கள் எதனும் நிறைவேறாமல் இருப்பதற்கு ஆளுங்கட்சியான ம.இ.கா. மிக மிக விழிப்பாக இருந்தது! அனைத்துக்கும் முட்டுக்கட்டைப் போட்டது!  தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்ததும் வேதமூர்த்தி அமைச்சரவையில் இருந்து விலகினார்! அத்தோடு அவரது - இந்தியர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அனைத்தும் - கனவாகிப் போயின! ம.இ.கா.வும் எதனையும் கண்டு கொள்ளவில்லை!!

ஆனாலும் இன்றைய நிலையில் ஹின்ராஃப் தேர்தலில் போட்டி இடுவதால் யாருக்கு என்ன பயன்?  அவர்கள் வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்! ம.இ.கா. எங்கெல்லாம் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அங்கெல்லாம் ஹின்ராஃப் தனது வேட்பாளரை நிறுத்தும் என்பது மட்டும் நிச்சயம்! பொதுவாக ம.இ.கா.வின் மேல் இந்தியர்களின் ஆதரவு என்பது கொஞ்சம் வருந்தத்தக்க நிலையில் தான் உள்ளது!   அவர்களோடு ஹின்ராஃப்  சேர்ந்து கொண்டால் - அவர்களோடு சேர்ந்து மற்ற எதிர்கட்சிகளும் சேர்ந்து கொண்டால் - ம.இ.கா.வுக்கு இது தான் கடைசித் தேர்தலாக இருக்குமோ?  ஒருசில இடங்களையாவது ம.இ.கா. தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் கடைசியாக அவர்கள்  பிரதமர் மூலம் அறிமுகப்படுத்திய இந்தியர்களின் முன்னேற்றதிற்கான மாபெரும் வியூகப் பெருந்திட்டத்தில்  கொஞ்சமேனும் நடமுறைப் படுத்தியிருக்க வேண்டும். வெறும் வாய்ச் சவடால்களும், வெறும் காகிதங்களும் இனி எடுபடாது என்பதை ம.இ.கா. புரிந்து கொள்ள வேண்டும்.

நிச்சயமாக ஹின்ராஃப் இயக்கத்தின் முதல் எதிரியாக ம.இ.கா. பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை!  பொதுவாக அதே நோக்கத்தில் தான் இந்தியர்களின் பார்வையும் இருக்கிறது என்பதும் உண்மை!

இந்தப் புதிய அரசியல் கட்சியின் வரவால் இந்தியர்களின் வாக்குகள்  சிதறியடிக்கப்படும் எனச் சொல்லலாம்! மற்றபடி இவர்கள் எதனையும் சாதிக்கப் போவதில்லை. சாதிப்பார்கள் என நம்புவதற்கும் வலுவான காரணங்கள் இல்லை!~

நம்முடைய வாக்குகளை நமக்கு நாமே அடித்துக் கொண்டும் பிரித்துக் கொண்டும்  இருக்கப் போகிறோம்!  இது தான் நமது அரசியல்!

ஹின்ராஃப் தொடரட்டும் தனது பணியை! வாழ்த்துக்கள்!



No comments:

Post a Comment