Saturday 20 May 2017

கல்வியைப் புறக்கணிக்கிறோமா?..


கல்வியைப் புறக்கணிக்கின்ற சமுதாயமா நாம்?  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை; இப்போது நிறைய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக, வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அனைத்தும் சரி தான். ஆனாலும் ஏதோ, எங்கோ ஒரு மூலையில் திருப்தி இல்லாத ஒரு மன நிலை.

தோட்டப்புறங்களில் நமது மக்கள் வேலை செய்த போது அங்கு தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அந்தப் பள்ளிகளில் படித்து முடித்தவுடன் மேலும் படிக்க பட்டணம் போக வேண்டும். ஒரு சிலர் கல்வியைத் தொடர்ந்தனர். பலரால் தொடர முடியவில்லை. வறுமை தான் காரணம்.

ஆனால் இவைகள் எல்லாம் ஓரளவு களையப்பட்டுவிட்டன. இப்போது பலர் தோட்டப்புறங்களைக் காலி செய்து விட்டனர்.  பட்டணப்புறங்களுக்கு அருகிலேயே வாழ்வதால் கல்வி கற்கும் வசதிகள் அதிகம். ஆனால் அதைவிட செலவுகளும் அதிகம். பெற்றோர்கள் தங்களால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கின்றனர். இது மேம்போக்கான ஒரு பார்வை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போனால்.........?  நம்மிடையே குடிகாரச் சமுதாயம் என்று ஒன்று இருப்பதை மறந்துவிடக் கூடாது.
எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கூட்டம்.  இவர்களை வைத்தே பணம் சம்பாதிக்கும் இன்னொரு அடிதடிக் கூட்டம். இது போன்ற குடிகாரர்களை ஆள் நடமாட்டம் இல்லாத சிறு சிறு தோட்டங்களில் இவர்களை வைத்து வேலை வாங்குவது, அவர்களுக்குச் சரியான சம்பளத்தைக் கொடுக்காமல், ஏதோ பெயருக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு, சாராயத்தைக் கொடுத்தே அவர்களை நிரந்தர அடிமையாக வைத்திருப்பது.....என்று இப்படிப் பல தொல்லைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். எப்போதும் குடிபோதையில் இருப்பவன் பிள்ளைகளின் கல்வி, பிறந்த சான்றிதழ், அடையாளக்கார்டு என்பதைப்பற்றி எல்லாம் எங்கே கவலைப்படப் போகிறான்!

இப்படி ஒரு குடும்பத்தை ஒரு காலக்கட்டத்தில்  நான் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு சீனக்குடும்பம் அவர்களின் பிள்ளைகளை அருகிலிருந்த ஒரு சீனப்பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு தமிழ்க்குடும்பம் பிள்ளைகள் பள்ளிக்குப் போக வேண்டுமே என்கிற உணர்வே இல்லாமல் இருந்தார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளை அந்தச் சீனப்பள்ளிக்கே அனுப்பியிருக்கலாம். அதுவும் இல்லை. பின்னர் எங்கள் குழுவினரே பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டோம்.

இப்போதும் இவர்களைப் போன்ற நிலையில் உள்ளவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நிரந்தரக் குடிகாரனாக இருந்தால் மனைவியால் என்ன செய்ய முடியும்? பள்ளிகளைப் பார்க்காத பிள்ளைகள் தான் உருவாகுவார்கள். ஆனால் இவர்களும் கணிசமான  அளவில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு தமிழ்ப்பெண்ணை மணந்த வங்காளதேசி கூட தனது பிள்ளைகள் மலாய்ப்பள்ளிக்கு அனுப்புகிறான். அவனுக்கு இருக்கின்ற அக்கறைக் கூட நமது இனத்தவருக்கு இல்லையே என்று நினைக்கும் போது நமக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

இது போன்ற பலவீனப்பட்ட குடும்பங்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறானே இன்னொரு அடிதடி தமிழன் அவனை நினைக்கும் போது அதுவும் நமக்கு வேதனயைத் தருகிறது. அவனது குடும்பமே விளங்காமல் போகும் என்பதை விளங்காமல் செய்கிறானே ...அவனை நாம் என்ன செய்வது?

எவ்வளவு தான் இடர்ப்பாடுகள் இருந்தாலும் இந்தச் சமூகம் தலைநிமிர்ந்து வாழும், வளரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு!

வாழ்க, தமிழினம்!






No comments:

Post a Comment