Monday 29 May 2017

சிக்கனமே நம்மை உயர்த்தும்!

 இது  தான் யதார்த்தம். நம்மிடம் சிக்கனம் இல்லை என்றால் நம்மால் எந்தக் காலத்திலும் பணத்தைப் பார்க்க முடியாது. பணத்தைச் செலவு செய்வதில் கவனம்! கவனம்! என்று சொல்லுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

இப்போது உள்ள விலைவாசிக்கு எப்படிச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது என்று நாம் எல்லாருமே சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். குறைவான விலைவாசியின் போது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தீர்களா? அப்படி என்றால் விலைவாசி குறைவோ, கூடவோ சிக்கனம் என்பது நம்மோடு கூடவே ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்.

சிக்கனம் என்பது உங்களது தேவைகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. தேவையற்றவைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்பது தான் முக்கியம். நாம் செய்கின்ற செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டால் நமக்குத் தெரியும் நாம் எங்கு மிகவும் தாராளமாக இருக்கிறோம்; தாராளமற்று இருக்கிறோம் என்பது. ஒரு பிச்சைக்காரனுக்குப் போடும் போது கொஞ்சம் தாராளமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் போது தாராளமாக இருக்கலாம். அது அவசியம். ஆனால் பிரச்சனை அங்கு அல்ல. நமக்குச் சொந்தமாக செலவு செய்கிறோமே அங்கு தான் நாம் ஏகப்பட்ட ஒட்டைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். புகைப்பது சுகாதாரக் கேடு என்பது நமக்குத் தெரியும். மது அருந்துதல் உடல் நலக்கேடு என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அதனை நாம் விட்டபாடில்லை. புகைப்பது என்பது நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளும் பிணப்பெட்டி என்பது நமக்குப் புரிகிறது. இருந்தாலும் அந்தப் பிணப்பெட்டியோடு ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்!

ஒவ்வொரு மனிதனும் தான் பிடிக்கும் புகைப்பழக்கத்தை விட்டாலே பல நூறு வெள்ளிகளை சேமிக்க முடியும். மது அருந்துவதை நிறுத்தினாலே பணம் மட்டும் அல்ல குடும்பத்தையும் ஒரு வளமான வாழ்க்கைக்குக் கொண்டு செல்ல முடியும். குடும்பத்தலைவன் மது அருந்தினால் அவனது  பிள்ளைகளும் அப்பனையே வழிகாட்டியாகக் கொள்ளுவார்கள். நாம் வேறு எதனையும் செய்ய வேண்டாம். நாம் சிகிரெட் பிடிக்காமல் இருந்தால் போதும். நாம் மது அருந்தாமல் இருந்தால் போதும். நாம் சிக்கனத்திற்கு வந்து விடுவோம்.

இன்றைய நிலையில் நாம் அதிகமாகச் செலவழிப்பது புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கு மட்டுமே! இவைகளை நிறுத்தினாலே நம் கையில் எப்போதும் பணம் இருக்கும். குடும்பத்தில் குடும்பத்தலைவர் சிக்கனமாக இருந்தாலே அந்தக் குடும்பம் வாழ்க்கையில் உயர்வைக் கண்டு விடும்.

மீண்டும் சொல்லுகிறேன் சிக்கனமே நமக்கு உயர்வைக் கொண்டு வரும்! சிக்கனத்தோடு, சிறப்பாக வாழ முயற்சி செய்வோம்!

No comments:

Post a Comment