Tuesday 7 November 2017

தாளடி பணிந்தேன், டாக்டர்!



இந்தியா, ஓடிஷா மாநிலத்தில் ஓர் அபூர்வாமான சம்பவம். மனிதம் செத்துவிட்டது என்று சொல்லும் இந்தக் காலக்கட்டத்தில் "அப்படியெல்லாம் இல்லை, அது  இன்னும் உயிர்  வாழ்கிறது"  என்று சொல்லும்படியான  ஒரு சம்பவம்.


எந்த மருத்துவ வசதியும் இல்லாத ஒரு கிராமம், சாரிகேத்தா. ஒரளவு வசதிகள் உள்ள  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் பத்து கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். ஆனால் பாதைகள் இல்லை.  சேறும், சகதியும், ஆறுகளையும் கடந்து செல்ல வேண்டும்.  டாக்டர் ஓம்கார் ஹோட்டா சமீபத்தில் தான் மாவட்ட சுகாதார மையத்தின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டிருந்தார்.  அன்று காலை வழக்கம் போல வேலைக்குப் போன போது அவருக்கு தொலைப்பேசி அழைப்பு காத்துக் கொண்டிருந்தது.  மலைப் பிரதேச கிராமம் ஒன்றில் வசிக்கும்,  சுபம் மார்சே, என்னும் பெண் பிரசவத்திற்குப் பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். இரத்தப்போக்கு  நின்றபாடில்லை.       

செய்தியை அறிந்த டாக்டர் ஓம்கார் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, தனது உதவியாளருடன், அந்தக் கிராமத்திற்கு  விரைந்தார்.  ஆனால் அவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டிய நிலையில் அந்தத் தாய் இருந்தார்.   ஆனால் ஆம்பலன்ஸோ வேறு எந்த வாகன வசதிகளோ அங்கு இல்லை. கிராம மக்களும் ஒத்துழைக்காத சூழ்நிலையில் அவரும் அந்தப் பெண்ணின் கணவரும் அந்தப் பெண்ணை ஒரு கட்டிலில் கிடத்தி இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.  சேறும் சகதியும் நிறைந்த 10 கிலோமீட்டர் தூரம். மூன்று மணி நேரப் பயணம் கட்டிலைத் தூக்கிக் கொண்டு!    

உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணுக்கு 18 மணி நேர தீவிர சிகிச்சை கொடுத்த பின்னர் இப்போது தாயும் சேயும் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டனர். 

இப்படியும் ஒரு டாக்டரா என்று நாமும் அதிசயிக்கிறோம்.  பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் இந்த நவ நாகரிகக் காலத்தில் இவரின் காலில் விழுந்து நானும் வணங்குகிறேன். இது ஒரு சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இவர் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்குத் தனது சேவைகளைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.    

உமது தாளடி பணிந்தேன், டாக்டர்!                                                                           




No comments:

Post a Comment