Monday 16 April 2018

வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...! (1)


வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்! எப்படி வேண்டுமானாலும் வரலாம!. எந்த ரூபத்திலும் வரலாம்! எந்தக் காலக் கட்டத்திலும் வரலாம்! எந்த நிலையிலும் வரலாம்! சிறியவர், பெரியவர் யாருக்கும் வரலாம்!  செல்வந்தர், வறியவர் யாருக்கும் வரலாம்!

அப்படித்தான் வந்திருக்கிறது ரமணி அம்மாளுக்கு.

தமிழகத்தின் ZEE TAMIL  தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் தான் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.  பாடல் போட்டி என்றாலே இளசுகளின் ஆதிக்கம் அதிகம்.  இளசுகள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் 63 வயது பாட்டியான ரமணி அம்மாள்  இந்தப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்று வரை வந்து அசத்தியிருக்கிறார்.  வெற்றி பெறா விட்டாலும் இறுதிச் சுற்று வரை வந்திருப்பதே அவருக்கு அது அபாரமான வெற்றி என்று எடுத்துக் கொள்ளலாம்!

ரமணி அம்மாள் ஒரு ஏழை பாட்டி. இப்போதும்  பல வீடுகளில்  பத்துப் பாத்திரங்கள்  தேய்த்துத்தான் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை பள்ளி சென்றிருக்கிறார். ஆங்கிலமும் பேசுவதாகச் சொல்லப்படுகிறது.

பாட்டி பள்ளி காலத்திலிருந்தே பாடி வந்திருக்கிறார். முறையான பயிற்சி ஒன்றும் இல்லை. எல்லாம் கேள்வி ஞானம் தான். பாடுவதில் ஆர்வம் மட்டும் குறையவில்லை. அவர் நன்றாகப் பாடுவார் என்பது பலருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் வீட்டு விசேஷங்களில்  யார் கூப்பிட்டாலும்  போய் பாடி வருவது வழக்கம். 

ரமணி  அம்மாளுக்கு  ஒன்பது  குழந்தைகள்.  கணவர்  இறந்து போனார். அதில் ஒரு விசேஷம்.  அவர்  திருமணம் ஆனதும் அவர்  கணவர் முதன் முதலாக அவரைச் சினிமாவுக்குக்  கூட்டிக்கொண்டு போய் காட்டிய முதல் படம் துலாபாரம்!  துலாபாரம்  படம்  பார்த்தவர்களுக்குத்  தெரியும்.  பார்த்தால் பத்து  நாளைக்காவது   தூக்கம்  வராது!  அவ்வளவு  சோக மயம். அவரது  வாழ்க்கை  அதனை  விட  துக்கம்  நிறைந்தது என்கிறார். கணவர் குடிகாரர்  என்பதால்  குடும்பச்  சுமை அவர் மீது  விழுந்தது. இது  நாள்  வரை  அவர்  அதிலிருந்து  இன்னும்  மீள  வில்லை.

இப்போது  தான்  அவர் - இந்தப்  பாடல்  போட்டிக்குப்  பிறகு - அவரது    வாழ்க்கையில்  வசந்தம்  வீசுகிறது.  வீட்டு  நிகழ்ச்சிகளில்  பாடிக் கொண்டிருந்த அவர்  ZEE TAMIL  தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  பங்கேற்றார்.  அவர் நிலை அறிந்து  அவருடைய  பொருளாதாரச்  சுமையை  உலகத்  தமிழர்கள்  பலர்  தீர்த்து  வைத்திருக்கின்றனர்.

ரமணி அம்மாளில் வாழ்க்கை  இப்போது  தான்  திசை  திரும்பியிருக்கிறது.  அவருடைய  பாடல்கள்  அனைத்தும் பெரும்பாலும்  கண்ணதாசன்  பாடல்கள். அனைத்தும் தத்துவப் பாடல்கள். அந்தப்  பாடல்கள்  அனைத்தும்  அவருக்கு  ஊக்கத்தைக்  கொடுத்தன. துணிவைக்  கொடுத்தன. தன்னம்பிக்கையைக் கொடுத்தன.  வேறு கசமுசா பாடல்களை  அவர் விரும்புவதில்லை. பணம்  கொடுத்தாலும் பாடுவதில்லை. கண்ணதாசன்  பாடல்களைப்  பாடிப்பாடியே ஊக்கத்தை வளர்த்துக் கொண்டார். அந்த ஊக்கம் தான் அவரை அந்த  மேடைக்கு  அழைத்துச் சென்றது. அந்த  ஊக்கம் தான்  அவரைப் பாட  துணிவைத் தந்தது.

இதிலிருந்து நமக்குப் புரிவது என்ன? நல்ல  பாடல்களைத்  தேர்ந்தெடுத்து நமது  மனதில்  பதிய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவாக மாற வேண்டும். அதுவே ஒரு நாள் செயலாக வெளிப்படும்.  செயல் பட துணிச்சலைக் கொடுக்கும். ரமணி அம்மாள் 63 வயது பாட்டியாக இருக்கலாம்.  அவரது  பாடல்கள்  இன்னும் பல பாட்டிகளுக்கும் ஊக்கம் கொடுக்கும்! வாழ்க! வளர்க!

No comments:

Post a Comment