Saturday 7 April 2018

நாய், பூனை இறைச்சி விற்பனை..!


கேட்பதற்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும் நாய் இறைச்சி, பூனை  இறைச்சி என்பதெல்லாம்  மலேசியாவில் இப்போது கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை!

ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டு சீனர்களிடம் நாய்  இறைச்சி  சாப்பிடுகிற பழக்கம் இருந்ததை  நாம் அறிவோம். இப்போது அந்தத் தலைமுறை எல்லாம் ஏறக்குறைய மறைந்து  போனது.  வயதான சீனப் பெண்மணிகள் சிலர் கையில் நீல நிறக்காப்பு அணிந்திருப்பதைக் காணலாம். இவர்கள் நாய் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நான் அறியவில்லை.

ஆனால் இப்போது இந்தப் புதிய நாய் இறைச்சி, பூனை இறைச்சி  அறிமுகம்  என்பது மலேசியர்களிடமிருந்து அல்ல! வியட்னாமிலிருந்து இங்கு வந்து அந்நிய தொழிலாளர்களாக வேலை செய்யும் வியட்னாமியரிடமிருந்தே  ஆரம்பமாகி இருக்கிறது. இவர்களுடைய  வாடிக்கையாளர்கள் வியட்னாமியர்கள் மட்டும் தானா அல்லது அவர்களோடு சேர்ந்து உள்ளூர் மக்களும்  இருக்கிறார்களா என்பது  தெரியவில்லை.

அதே போல பூனை இறைச்சியும் விற்பனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் வியட்னாமியரின் கைவண்ணமே! தீடீரென பூனைகள் அளவுக்கு அதிகமாக தத்தெடுக்கப்படுகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்ததும்  காரணமும் புரிந்தது!  மருத்துவ காரணங்களுக்காக கறுப்பு நிறப் பூனைகளின் இறைச்சியைச் சாப்பிடும் பழக்கம்  நம்மிடையே இருந்தது. இப்போதும் இருக்கிறதா, தெரியவில்லை.  

நாய் இறைச்சி சாப்பிடுகின்ற கலாச்சாரம் என்பது வியட்னாமியரிடையே  அவர்களது நாட்டில் இப்போதும் உள்ளது. நமது நாட்டில் இல்லை.  நமக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. ஆனால் அந்தப் பழக்கம் நம் நாட்டில் உண்டு. பன்றி இறைச்சி சாப்பிடும் பழக்கம் நம் நாட்டில் உண்டு. ஆனால் எல்லாரும் சாப்பிடுவதில்லை. மதம் ஒரு காரணம். பாரம்பரியம் ஒரு காரணம்.

ஆனால் முடிந்தவரை புதிதாக ஒன்றை இறக்குமதி செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். வியட்னாமிலிருந்து இங்கு வேலை செய்ய வருபவர்கள் நமது நாட்டின் கலாச்சாரத்தை புரிந்து வைத்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு இங்குள்ள கலாச்சாரம்  தெரிய வாய்ப்பில்லை. 

நாய், பூனை என்பதெல்லாம் நாம் வளர்க்கும் வீட்டுப் பிராணிகள். வெறும் வளர்ப்பு மட்டும் அல்ல அவைகள் நமது செல்லப்பிராணிகள். வியட்னாமியருக்கு அவைகள் இறைச்சி தரும் ஒரு பிராணி.

முடிந்த வரை தவிர்ப்போம்!

No comments:

Post a Comment