Saturday 28 April 2018

கேள்வி - பதில் (78)


கேள்வி

தமிழக அரசியலில் ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதால் யாருக்கு என்ன பயன்?

பதில்

இவர்கள் அரசியலுக்கு வருவதால் வேறு வகையான பயன் உண்டு.   எப்படியும் இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. இவர்களுக்கு நடிப்பதற்குப் படங்கள் இருக்கும் வரை இவர்களால் மனம் திறந்து எது பற்றியும் பேச மாட்டார்கள்! பேச முடியாது! இது தான் இவர்களின் இன்றைய நிலை.

இவர்கள் இருவருமே மத்திய அரசாங்கத்தைப் பற்றி வாய்த் திறப்பதில்லை.  மிஞ்சி மிஞ்சிப் போனால் கமல் தமிழக முதலமைச்சரைத் தான் விமர்சனம் செய்ய முடியும்! அந்த எல்லைக்கு மேல் அவர் போக மாட்டார். ரஜினிக்கும் அதே நிலை தான்.  தமிழகத்தை இவர் தாண்டமாட்டார். இவருடைய நடவடிக்கைகள் ஏறக்குறைய பா.ஜ.க. வோடு ஒத்துப்போகும்.

இவர்களால் ஒரு பயன் உண்டு. தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு இவர்கள் பணம்  கொடுக்க  முன்வர    மாட்டார்கள் என நம்பலாம். பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். குறைந்தபட்சம் இந்த ஒன்றிலாவது அவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்று ஏதோ கொஞ்சம் நம்பிக்கையுண்டு! 

இவர்கள் ரசிகர் மன்றங்களை வைத்தே அரசியல் நடத்துவதால் குறைந்தபட்சம் அவர்களின் ரசிகர்களாவது வாக்குகளுக்குப் பணம் வாங்குவதை தவிர்க்கவே நினைப்பார்கள். இப்படி இவர்கள் பணம் வாங்காமலே வாக்குகளைப் போட்டால் அதுவே  தமிழகத்திற்குப் பெரிய வெற்றி! ஐம்பது ஆண்டு காலம் தமிழ் மக்களை "பணம் கொடுத்தால் தான் வாக்கு" என்கிற ஒரு நிலையை  திராவிடக் கட்சிகள் உருவாக்கி விட்டன! அதனை சரி செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த 'வாங்கும்' மனப்பான்மையை ஒரளவு இவர்களின் இரு கட்சிகளாலும் செய்ய முடியும் என்பதாகவே நான் நினைக்கிறேன்.

கமலும் ரஜினியும் அரசியலில் என்ன சாதிப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த ஒன்றை அவர்கள் சாதித்தாலே போதுமானது. வாக்குக்குப் பணம் என்கின்ற ஒன்றை ஒழித்தாலே போதும்! தமிழகத்தில் நல்ல ஒரு சூழல் உருவாகும். நல்ல அரசாங்கம் அமையும்.

இவர்களால் இந்த ஒரு பயனே போதும்!

No comments:

Post a Comment