Friday 6 April 2018

ம.இ.கா.வை ஒழிக்க வேண்டும்!


"ம.இ.கா. ஒழிக்கப்பட வேண்டும்!" 

இதனைச் சொன்னவர் வேறு யாருமில்லை. நாட்டின் தொழிற் வளர்ச்சியின் தந்தை என்று போற்றப்படுபவரும், 22 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்தவருமான டாக்டர் மகாதிர் சொன்ன வார்த்தைகள்!

மலேசிய இந்தியர் காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கத்தை, பல தியாகிகளால் உருவாக்கப்பட்ட அந்த பேரியக்கத்தை, ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் போது மனதுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் நாம் என்ன செய்வோம்?  தகாதவர்களிடம் கட்சியை ஒப்படைத்தோம்.  அதனால் இந்த சமுதாயம் அடைந்த பயன் என்ன?  பதவியில் இருந்தவர்கள் மாட மாளிகையில் வாழ்கிறார்கள்.  மாடமாளிகையில் வாழ வேண்டியவனோ மண்டபங்களிலும் இடிந்துபோன இடிபாடுகளிலும் வாழ்கிறான்! இது தான் தகாதவர்களால் ஏற்பட்ட வளர்ச்சி!

சரி, டாக்டர் மகாதிரின்  கால் நூற்றாண்டு ஆட்சி தான் அப்படி என்றால் இன்றைய நிலைமை என்ன? இல்லை! எந்த மாற்றமும் இல்லை! ஆள் மாற்றம் தான் ஏற்பட்டிருக்கிறதே தவிர மற்றபடி அதே பாணி அரசியல். திருட்டுத் தனம், நிதி வளங்களைக் கொள்ளையடிப்பது, புதிய புதிய அறிவிப்புக்களைச் சொல்லியே அரசியல் நடத்துவது - மாற்றங்கள் என்று எதுவும் இல்லை! நாங்கள் யாரும் யோக்கியர்கள் இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு உள்ளது  தான் இன்றைய அரசியல்.

இந்தியர்களுக்கென்று பிரத்தியேகமாக  மாபெரும் திட்டம் என்று சொன்னார்கள். என்ன ஆயிற்று? இதுவரை எந்தச் சத்தத்தையும் காணோம்! "அடுத்த பத்தாண்டுகளுக்குள்" என்று இப்படியெல்லாம் சொன்னால் யாரும் நம்பத் தயாராக இல்லை! அடுத்த மூன்று மாதங்களுக்குள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் என்று செய்கின்ற சாதனைகளைக் காட்டினால் ஏதோ கொஞ்சமாவது நம்பலாம். காரணம் "அடுத்த பத்து" என்பதெல்லாம் கேட்டுப் புளித்துப் போய்விட்டது! வருஷமெல்லாம் நமக்கு வேண்டாம். மாதங்கள் தான் நமக்கு வேண்டும்.

சரி, ம.இ.கா. ஒழிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் மாகாதிர் சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  உங்களைச் சுற்றிப் பாருங்கள். ம.இ.கா.வின் சாதனைகளைப் பாருங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா அல்லது வேதனை அளிக்கிறதா? அது போதும் நாமே ஒரு முடிவுக்கு வரலாம். என்னைக் கேட்டால் தமிழை அழிக்க இரு மொழித்திட்டத்திற்கு ம.இ.கா. வே கீழறுப்பு வேலை செய்கிறதே அது ஒன்றே போதும் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்!

நமது உரிமைகள் காக்கப்பட வேண்டும்; ஆனால் இவர்களே அதனைக் காற்றில் பறக்க வைக்கிறார்கள்!

No comments:

Post a Comment