Friday 13 April 2018

கேள்வி - பதில் (77)


கேள்வி

 ரஜினி தீடீரென காவலர்கள் மீது கை வைக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பேசுவது சரியான வாதமா?

பதில்

காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சரியல்ல. அவர் சொல்லுவது சரி தான். 

ஆனாலும் இங்கு அவர் குறிப்பிடுவது ஒரு தவறான உதாரணம். காவலர்கள் தொடர்ந்து வன்முறையைப் பயன்படுத்தி மக்களைத் துன்புறுத்துவது பற்றி அவர் வாய்த்  திறக்கவில்லை. ஒர் பெண்ணைக் கடுமையாகத் தாக்கினார் என்பதற்காகவே காவலர் ஒருவருக்குப் பதவி உயர்வு கொடுத்தது அரசாங்கம்!  இது நியாயம் அல்ல என்பது ரஜினிக்குத் தெரியாதா? மக்களை அடித்தால் அதுவும் பெண்களை அடித்தால்  பதவி உயர்வி கிடைக்கும் என்றால் என்ன அர்த்தம்? ஏன் அவர் அதனைக் கண்டிக்கவில்லை என்பதெல்லாம்  நியாயமான கேள்விகள் தானே?

பெண்கள் வீதிக்கு வந்து எந்தப் பிரச்சனைக்கும் அறப் போராட்டம் கூட நடத்தக் கூடாது என்றால் அவர்கள்  என்ன செய்ய வேண்டும் என்று காவல்துறை தான் சொல்ல வேண்டும். கண்ட இடங்களில்லாம் சாராய விற்பனை.  அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதனை ஒடுக்க காவல்துறை தலையீடு. பெண்களை அடிப்பது.

பொதுவாக போராட்டங்கள் எல்லாம் வன்முறை இல்லாமல் தான் நடத்தப்படுகின்றன. ஏதோ ஒருவர் இருவர் உணர்ச்சி வசப்பட்டு அசம்பாவிதங்கள் நேரலாம்.  ஆனால் பெரும்பாலும் அரசியவாதிகளின் தூண்டுதல்களினால் காவல்துறை மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

பலமுறை  மக்கள் மீது  தாக்குதல்கள் நடந்த போதெல்லாம் ரஜினி எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை. ஆனால் தீடீரென ஏன் இந்த கரிசனம்? அவர் செய்வதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது. அவரைப் பா.ஜ.க. இயக்குகிறது என்று சொல்லலாம். இவர் "ட்வீட்" செய்ததும் உடனே தமிழிசை அதனை  வரவேற்கிறார். தனக்குச் சோறு  போட்ட  தமிழனை எட்டி உதைக்கிறார் என்பது தானே பொருள்? தனது படங்களில் கூட காவல்துறையினரை அடித்துத் துவம்சம் பண்ணுவதாகத்தானே காட்சிகள் வருகின்றன.  அப்படியிருந்தும் கூட தமிழர்கள் வன்முறையைக் கையில் எடுக்கவில்லை!

ரஜினி சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மை தெரிய வேண்டுமானால்  அவர் வீதிக்கு வர வேண்டும். உள்ளே ஒளிந்து கொண்டு கருத்து சொல்லுவதை நிறுத்த வேண்டும்!

No comments:

Post a Comment