Friday 18 May 2018

இந்திய வாக்காளர்கள் 85%....!


14-வது பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் - 85 விழுக்காட்டினர் - எதிர்கட்சியான பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? இது நாள் வரை பாரிசானுக்கே காலங்காலமாக வாக்களித்து வந்தவர்கள் எப்படி,  இப்படி ஒரு மன  மாற்றத்துக்கு வந்தனர்?  

தேர்தலின் சொல்லப்பட்டக் கணக்கு சுமார் 63 தொகுதிகளில்  இந்தியர்கள் யாருக்குத் தலை ஆட்டுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்று நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே வந்தன நமது ஊடகங்கள்.  இந்த 63 தொகுதிகளில் பாரம்பரியமாக  நாம் பாரிசானுக்கு வாக்களித்து வந்திருக்கிறோம். இந்த முறை நாம் அப்படி வாக்களித்திருந்தால் ஒரு வேளை பாரிசானுக்கு இப்போது இருப்பதை விட 63 தொகுதிகளில் கூடுதலாக வென்றிருக்கலாம். ஆனால் இந்த 63 தொகுதிகளிலும் உள்ள வாக்காள இந்தியர்கள்  எதிர்கட்சியான பக்காத்தான் பக்கம் திரும்பி விட்டார்கள்! பாரிசான் (ம.இ.கா.) என்னும் பாரம்பரியத்தை உடைத்து தகர்த்து விட்டார்கள்! 

வயதானவரிடையே  ம.இ.கா. கொஞ்சம் எடுபட்டிருக்கலாம். அது துன் சம்பந்தன் மேல் உள்ள பாசம்;  முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் மேல் உள்ள "நல்லவர்" என்கின்ற அந்த அபிப்பிராயம். அவர்கள் தலைவர்களாக இருந்த காலத்தில் நாம் இந்த அளவுக்குக் கீழ் மட்டத்துக்குப் போகவில்லை. தரமான வாழ்க்கை முறை இருந்தது.

ஆனால் இப்போதைய நிலை வேறு. எல்லா வகையிலும் நாம் புறக்கணிக்கப்பட்டோம். நேற்று வந்த வங்காள தேசத்துவனுக்குக் கொடுக்கப்படுகின்ற  மரியாதை  கூட நமக்குக் கொடுக்கப்படவில்லை. இந்நாட்டில் பிறந்தவன்  நாடற்றவன்  ஆனால் வேறு நாட்டிலிருந்து வந்தவன் இந்நாட்டுக் குடிமகன்!  பொங்கி எழுந்தனர் நமது இளைஞர்கள். அது போதும் பாரிசான் ஆட்சியை வீழ்த்த!

63 தொகுதியில் நமது வாக்குச்சீட்டு 85 விழுக்காடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது!  ஒரு அரசாங்கத்தை  வீழ்த்த  அது போதும்.

அராஜகம் அதிகரிக்கப்படும் போது பொங்கி எழுவான் தமிழன் என்பதை நம் இளைஞர்கள் காட்டிவிட்டார்கள்!  வாழ்த்துகள்!

1 comment: