Monday 28 May 2018

என்னடா பழக்கம் ....?


இது நோன்பு மாதம். முஸ்லிம்களின் புனித மாதம். காலையிலிருந்து மாலை வரை நோன்பு இருந்து - ஒரு நாள், இரு நாள் அல்ல - ஒரு மாத நோன்பு.

நோன்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ளது தான். ஆனால் தொடர்ந்தாற் போல் இருப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் வேறு பட்டிருக்கும். தனிப்பட்ட மனிதர்கள் ஒரு சிலர் மிகக் கடுமையான நோன்பு இருப்பதைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

நான் அது பற்றியெல்லாம் பேசப் போவதில்லை. காரணம் நான் நோன்பு இருந்ததில்லை! அதைப் பற்றி நான் அதிகம் அறிந்ததுமில்லை! மன்னிக்கவும்!

நான் சொல்ல வருவதெல்லாம், குறிப்பாக இந்த நோன்பு மாதத்தில், ஒரு சிலர் செய்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என்ன இது,கண்ட இடங்களிலெல்லாம் எச்சில் துப்பும் பழக்கம்? சாதரணமாகவே பொது இடங்களில் எச்சில் துப்புவதை நான்  விரும்பாதவன். ஆனால் இது  நோன்பு மாதம். புனித மாதம். புனித மாதத்தில் இப்படி செய்வதைக் கூட புனிதம் என்று நினைக்கின்ற மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்! அப்படித் தான் நான் நினைக்கிறேன்!

இவர்களை எப்படி மாற்றுவது? அவர்களிடம் சொல்லவும் முடியவில்லை. காரணம் காலையிலிருந்து நோன்பு இருக்கிறார்கள். நாம் எதையாவது சொன்னால் அவர்கள் மனம் புண்படும். அவர்கள் நோன்பு எடுப்பதை நாம் கிண்டல் செய்கிறோம் என நினைப்பார்கள். இது கொஞ்சம் சிக்கலானது. இது சமயம் சம்பந்தப்பட்டது என்பதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

ஆனால் இவர்களுக்கு இதனைப் புரியவைப்பது சமயவாதிகளின் கடமை. அதுவும் பள்ளிவாசல்களில் இதனை உணர்த்த வேண்டும். ஒருவர் நோன்பு எடுப்பது புனிதம் தான். அந்தப் புனிதம் அவருக்குப் போய்ச் சேருகின்றது. ஆனால் அவரே பொது வெளியில் எச்சில் துப்புவராக இருந்தால்  அவர் எச்சில் துப்புவதன் மூலம்  மற்றவர்களுக்கு வியாதியைப் பரப்புபவராக ஆகி விடுகிறார்! 

எப்படி இருந்தாலும்  இந்தப் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். புனித மாதம் புனித மாதமாகவே இருக்கட்டும்!  இந்தப் புனித மாதத்தில் புனிதமற்ற செயல்கள் வேண்டாம்!


No comments:

Post a Comment