Friday 11 May 2018

ம.இ.கா.விற்கு வெட்கமில்லை!


ம.இ.கா. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் பொதுவாக நமது ஆசை. காரணம் அக்கட்சி இந்தியர்களின் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாமல் ம.இ.கா. தலைவர்களின் நலனில் அக்கறை காட்டியது தான் அவர்கள்  இந்திய சமுதாயத்திற்குச் செய்த துரோகம்.

அந்தக் கட்சியின் எந்தத் தலைவனுமே சாதாரண வாழ்க்கையோ, நடுத்தர வாழ்க்கையோ, நடுத்தரத்திற்கு மேம்பட்ட வாழ்க்கையோ வாழவில்லை என்பதே அதற்குச் சான்று.

இப்போது நடைப்பெற்ற பதினான்காவது பொதுத்தேர்தல் பெரும்பாலும் அவர்களைத் துடைத்தொழித்து விட்டது என்பதை நாம் அறிவோம்.

ஆனாலும் ம.இ.கா.வினர் இந்தத் தேர்தல் தோல்வி பற்றி வெட்கப்பட ஒன்றுமில்லை. ஒரே காரணம் இந்தத் தேர்தலில் ம.இ.கா.வினர் மட்டும் தோல்வியடையவில்லை. அனைத்து பாரிசான் கட்சியினருமே தோல்வியடைந்திருக்கின்றனர். அம்னோ பெருந்தலைகள், ம.சீ.ச. பெருந்தலைகள் அனைவருமே தோல்விகளைத் தழுவியிருக்கின்றனர். அம்னோ இந்த அளவு தோல்வி அடையும் என்பதை யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அது நடந்தது! அம்னோவோடு ஒப்பிடும் போது ம.இ.கா.வின் தோல்வி பெரிதாக ஒன்றுமில்லை!

ம.இ.கா. தோல்வி அடைய வேண்டும் என்பது தான் இந்திய சமுதாயத்தின் எண்ணமாக இருந்தது என்பது உண்மை. ஆனால் நமது எண்ணம் வேறு விதமாக இருந்தது.  அந்தக் கட்சி அடித்து நொறுக்கப்பட வேண்டும், மீண்டும் தலைதூக்கக் கூடாது, அவமானப்பட்டு புழுங்கிச் சாக  வேண்டும் என நாம் நினைத்தோம். ஆனால் அது நிகழவில்லை. அம்னோ தோற்றது, ம.சீ.ச. தோற்றது, இவர்களும் தோற்றார்கள்! அவ்வளவு தான். நாம் நினைத்தது நடக்கவில்லை. மற்ற பாரிசான் கட்சிகளுக்கு என்ன நடந்ததோ அதுவே தான் இவர்களுக்கும் நடந்தது! அதனால் அவர்கள் வேட்கப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை. 

இனி ம.இ.கா.வை வழி நடத்தி,  அதனது பழைய நிலைக்குக் கொண்டுவர துன் சம்பந்தன் இல்லை! அவர் தான் கட்சிக்கு "சேவை" என்னும் நல்லதொரு பாதையைக் காண்பித்து விட்டுப்  போனார். பின்னர் வந்தவர்கள் "தேவை" என்பதைக் காட்டிவிட்டுப் போனார்கள்!  இவர்கள் பணம் போட்டுக் கட்சியை வளர்க்க மாட்டார்கள்! இன்னொருத்தர் போட்டு வைத்தால் அதனில் பயணம் செய்வார்கள்!

எது எப்படி இருப்பினும் இந்தத் தோல்வியினால் ம.இ.கா.வினர் வெட்கப்பட ஒன்றுமில்லை, நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதைத் தவிர!

No comments:

Post a Comment