Saturday 19 May 2018

ஆரம்பிச்சிட்டாங்கய்யா...!


தேர்தல் முடிந்துவிட்டது! எதிர்பாராதது நடந்து விட்டது!

இனி யாருக்கு என்ன பதவி என்பது பற்றியெல்லாம் பேச்சு வார்த்தைகள், பத்திரிக்கை அறிக்கைகள், பிரச்சாரங்கள் - எல்லாம் தூள் பறக்கும்! யாருக்கும் பொறுமை இல்லை! அறிக்கை விடுவதில் யார் முந்திக் கொள்ளுகிறார்களோ அவர்களுக்குத் தான் பதவி என்பதாக  அவர்களே ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்!

பதவிகள் இப்படியெல்லாம் வருவதில்லை,  நண்பனே! அது அமைச்சர் பதவியாகட்டும், செனட்டர் பதவி ஆகட்டும், ஏதோ ஒரு குழுவில் அங்கம் பெருவதாக ஆகட்டும்,  அதெல்லாம் உங்கள் தலைவனுக்குத் தெரியும். எப்போது உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் தலைவன் அறிவான். "நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், என்னால் தான் உங்களுக்கு அந்த வெற்றி கிடைத்தது, ஓட ஓட உழைத்தேன், வேர்வை சிந்த சிந்த உழைத்தேன்!" இது போன்ற கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்! உங்கள் ஒருவரின் உழைப்பினால் யாரும் வெற்றி பெற வில்லை. இன்றைய இந்த வெற்றி என்பது ஒருவரால் வந்தது அல்ல. இளைஞர்  சமுதாயத்தின் கூட்டு முயற்சி. ஒரு வெறித்தனமான உழைப்பு. நமது சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள். அதனால் ஏற்பட்ட கோபம், ஆத்திரம்.  இது ஒரு வகையான அமைதிப் புரட்சி என்று சொல்லலாம்.

அதனால் எதற்கும் அவசரப்படாதீர்கள். பொறுமையாய் இருங்கள். ம.இ.கா. வில் இவ்வளவு நாள் அடித்துக் கொண்டும், கடித்துக் கொண்டும் இருந்தோமே, அது போதும்! அப்போது இந்த சமுதாயம் என்ன பயன் அடைந்தது?  அவர்களால் நாம் ஏமாந்தது தானே மிச்சம்! அதன் தொடர்ச்சியை இங்கும் கொண்டு வராதீர்கள்.

இப்போது நமக்குத் தேவை எல்லாம் பக்காத்தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள். அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றும் பட்சத்தில் உங்களுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்படும். அப்போது உங்களுக்குத் தேவையான பதவிகளும் உங்களைத் தேடி வரும்.

நீங்கள் நல்ல சேவையாளர் என்றால் பதவிகள் உங்களைத் தேடி வரும்.  நீங்கள் ஆள்களை வைத்து உங்களை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை! உங்கள் சேவை தொடரட்டும்!

No comments:

Post a Comment