Monday 7 May 2018

பெரிசு: 93, சிறிசு: 22.....!


இந்தத் தேர்தலில், முதன் முறையாக,  முதுமையானவர் ஒருவர் போட்டியிடுகிறார் என்றால் அது டாக்டர் மகாதிர். அவருக்கு வயது 93. ஆக இளமையானவர் போட்டியிடுகிறார் என்றால் அது பி. பிரபாகரன்.  அவருக்கு வயது 22.


.
டாக்டர் மகாதிரைப் பற்றியான அறிமுகம் தேவை இல்லை. ஆனால் அவர் இந்த 22 வயதான பிரபாகரனை ஆதரிக்கும்படி பிரச்சாரம் செய்கிறார்.

யார் இந்த பிரபாகரன்?  இவர் சுயேட்சை வேட்பாளராக பத்து தொகுதி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார். இன்னும் அவர் தனது சட்டக்கல்வியை முடிக்கவில்லை.  இன்னும் இரண்டு வாரத்தில் தனது சட்டக்கல்வி தொடர்பான பரிட்சை எழுத வேண்டியவர். படிக்க வேண்டிய இக்கட்டான நேரத்தில் அரசியல் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார். சுயேட்சை வேட்பாளர் ஜெயிக்க முடியுமா?

ஆனால் இங்கு தான் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. இவர் போட்டியிடுவது சாவி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக. அவர் போட்டியிடுவதே ஒரு தமாஷான விஷயமாக கருதப்பட்டது.  ஆங்காங்கே  இவரைப் போன்ற சுயேட்சைகள் தேர்தலில் நிற்பது என்பது  வாடிக்கை  தான். அதில்  பல  காரணங்கள் உண்டு. அதில்  ஒன்று  வாக்குகளைப் பிரிப்பது.  ஆனால் இவர் ஒரு சட்டத்துறை  மாணவர் என்பதால் அவர் அரசியல் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் காரணமாக இருக்கலாம். அவர் வேடிக்கையாக செய்த ஒன்று வினையாகப் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.   இந்தப் பத்து தொகுதியில் முன்னாள்  இரு முறை   நாடாளுமன்ற உறுப்பினரும் போராளியுமான தியான் சுவா இந்தத்  தேர்தலில்  போட்டியிட  முடியாத ஒரு  சூழலை தேர்தல் ஆணையம்  உருவாக்கி விட்டது.  அவர் பி.கே.ஆர். சார்பாக தேர்தலில்  போட்டியிட  வேண்டியவர்.  ஆனால் வாய்ப்புக் கொடுக்கப்பட வில்லை. அவர் போட்டியிடவில்லை என்றால் அது பாரிசானுக்கு வெற்றியைக் கொடுக்கலாம். அதனைத் தவிர்க்கவே பி.கே.ஆர். பிரபாகரனிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி அவர்கள் சார்பில் போட்டியிட சம்மதிக்க வைத்தனர். அதனால் சுயேட்சை என்ற பெயர் போய் அவர் பி.கே.ஆர். வேட்பாளராக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவருடைய வெற்றி வாய்ப்புக்கள் எப்படி? சிறப்பாகவே இருக்கும் என நம்பலாம். தியான் சுவாவின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கே வாக்களிப்பார்கள் என்பது உறுதி. மகாதிரின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கே  வாக்களிப்பார்கள் என்பதும் உறுதி. அதே சமயத்தில் இவருக்காக தியான் சுவா மட்டும் அல்ல டாக்டர் மகாதிரும் பிரச்சாரம் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய விஷயம்.

பிரபாகரனின் ஆரம்பமே 'அதிருதல்ல!' என்று சொல்லும்படியாக இருக்கிறது! டாக்டர் மகாதிரின் மோதிரக்கையால் கொட்டு வாங்கியிருக்கிறார்! நீ வெற்றி பெறுவாய் இளைஞனே! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment