Friday 4 May 2018

தமிழ் இல்லையா? புறக்கணியுங்கள்!


நாம் எல்லாக் காலங்களிலும் மிகவும் தாராளக் குணமுடையவர்களாக  இருக்கிறோம். அதனை நமது பலவீனமாக மற்ற இனத்தவர்கள் நினைக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளீர்"  என்பதெல்லாம் நமது இளிச்சவாயதனத்தின் அடையாளம் என்று மற்றவர்கள் நினைக்கும் அளவிற்குத் தான் நாம் உள்ளோம். நன்றி கெட்டவர்களின் பார்வையில் நாம் நன்றி கெட்டவர்கள்!

நமது இந்திய வியாபார நிறுவனங்களைத்தான் சொல்லுகிறேன். பெரும்பாலும் தமிழர்களையே நம்பி வாழும் இந்த நிறுவனங்கள் கொஞ்சம் கவனித்தால் அவர்கள் தமிழைப் புறக்கணிப்பதை நாம் பார்க்கின்றோம். இன்னும் ஒரு சில நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குத் தமிழைப்  போட்டுவிட்டு தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக நினைக்கிறார்கள்.

ஆனால் எதைப் பற்றியும் நமக்குக் கவலை வேண்டாம். நாம் நாமாக இருக்க வேண்டும். நமக்கு என்று சில கொள்கைகள் உண்டு.  அந்தக் கொள்கையில்  நாம்  உறுதியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.  இந்த நிறுவனங்கள் தமிழைப் புறக்கணித்தால் நாம் அவர்களைப் புறக்கணிப்போம்.  தயவு தாட்சண்யம் என்பதை எல்லாம் நாம் மூட்டைகட்டிப் போட்டுவிட்டு நம்மால் எதை செய்ய முடியுமோ அதனைச் செய்வோம்.  இனிமேலும் "நான் ஒருவன் புறக்கணித்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?" என்னும் கேள்விகள் எல்லாம் வேண்டாம். நான் புறக்கணிக்கிறேன், அவ்வளவு தான்.

சமீபத்தில்  புதிதாக   இனிப்புக்கள்  விற்கும் (பலகாரக் கடை)    ஒரு கடையைப் பார்க்க நேர்ந்தது.  நம் இன  இளைஞர்கள் தொழில் செய்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் பெரும்பாலும் நம்மை நம்பி வியாபாரம் செய்யும் இவர்கள் - மற்ற இனத்தவரும் இனிப்பு சாப்பிடுகிறார்கள் என்பதும் உண்மை தான் - அவர்களுடைய விளம்பரப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருந்தது. அவர்கள் சீனர்களையோ நம்பியோ, மலாய்க்காரர்களை நம்பியோ - எப்படிப் பார்த்தாலும் இந்தியர்களை நம்பியே வியாபாரத்திற்கு வந்திருக்கும் இவர்கள் - மற்ற இனத்தவர்களை நம்பி  வரவில்லை என்பது திண்ணம். அப்படியிருக்க அவர்கள் ஏன் தமிழைப் புறக்கணிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இவர்கள் தங்களைத் தமிழர்கள் இல்லை என்பதைக் காட்டுகிறார்கள் என்பது தானே பொருள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? "நான் தமிழன் இல்லை  தமிழை நான் விளம்பரப்படுத்த  விரும்பவில்லை. நான் விற்கும் பொருளை நிச்சயம் தமிழன் வாங்குவான்" என்று தானே அவர்கள் நினைக்கிறார்கள்?  அது தவறு என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும்.

இது போன்ற செயல்களை நாம் வளர்த்து விடக்கூடாது என்பது தான் எனது கோரிக்கை. நம்மை நம்பி வாழ்பவன் எல்லாம் நமது மொழியைப் புறக்கணித்தால் நாமும் அவர்களின் நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும். சீனர்களைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டும். இனி நமக்குத் 'தாராள' மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்னும் அவசியமில்லை.

கடைசியாக ஒன்றே ஒன்று தான். தமிழ் இல்லையா? புறக்கணியுங்கள்!

No comments:

Post a Comment