Sunday 6 November 2022

பொய் சொல்லக் கற்றுக்கொள்!

 


பள்ளிக்கூடம் போகும் மாணவ/மாணவிகள் எப்படிச் சரியான காலணிகளை அணிய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலே நீங்கள் பார்க்கும் காலணிகளை அணிவது மாபெரும் குற்றம் என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். சரியான காலணி என்பது கருப்பு நிறமாகவும், கயிறு உள்ளதாகவும் இருக்க வேண்டும். 

அதுவும் நீங்கள் இந்திய மாணவியாக இருந்தால் நீங்கள் மாணவர்கள் முன்னால் முட்டிப் போட  வேண்டி வரும்.  இது தான் உங்களுக்குத்  தண்டனை!

நீங்கள் ஏழை என்பது பள்ளிக்கூடத்தின் பிரச்சனை அல்ல! அவர்களுக்குக் கட்டுப்பாடு தான் முக்கியம்1 நீங்கள் ஏழையாக இருப்பது உங்கள் குற்றம்!

சமீபத்தில் ஒரு மாணவி,  இது போன்ற காலணிகளை அணிந்ததற்காக,  பள்ளி ஆசிரியை ஒருவரால் மேற்சொன்ன தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்!

மாணவியின் பெற்றோர் இது சம்பந்தமாக போலீஸ் புகார் செய்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியை "அப்படியெல்லாம் அந்த மாணவிக்கு எதுவும் நடக்கவில்லை!" என்பதாக அவரும் போலீஸில் புகார் செய்திருக்கிறார்! அவர் தனக்கும்  சாட்சியங்கள் உள்ளதாகக் கூறுகிறார்!

மேற்சொன்ன அனைத்தும் காலையில் பள்ளிக்கூடம் கூடும்  நேரத்தில் நடந்தாகச் சொல்லப்படுகிறது. அதாவது  மாணவர்கள் முன்னிலையில்  இவை அனைத்தும் நடந்தேறியிருக்கின்றன. 

ஆனாலும்  தனக்குச் சாட்சியங்கள் இருக்கின்றன என்கிறார் ஆசிரியை!  அப்படியென்றால் மாணவர்கள் தான் அவருக்குச் சாட்சியங்கள். இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.  ஒன்று ஆசிரியைச் சொல்லுவது போல எதுவும் நடக்கவில்லை. அப்படியென்றால் அவர் சொல்லுவது சரிதான். இன்னொரு பக்கம் பார்த்தால் மாணவர் முன்னிலையில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால்  அங்கு நடந்த  சம்பவத்தை மாணவர்கள் பார்த்திருக்க வேண்டும். 

இங்கு நமக்கு ஒரு கேள்வி உண்டு. மாணவர்கள் பார்த்திருந்தால், ஆசிரியையின் தூண்டுதலினால், அவர்கள் பொய் சொல்லும்படி  பணிக்கப்படலாம். அதற்கான சாத்தியங்களும் உண்டு. மாணவர்களைப் பொய் சொல்லும்படி ஒரு ஆசிரியர் தூண்டுவாரானால்  அது  மாபெரும் குற்றம். மிகவும் இழிவான ஒரு செயல்.

குறிப்பாகத் தமிழர்கள் ஆசிரியர்களை 'மாதா, பிதா,குரு'  என்று சொல்லி ஆசிரியர்களை குரு என்கிற  மிக உயரிய இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். மாணவர்களைப் பொய்  சொல்லத் தூண்டுவது என்பது மன்னிக்கப்பட முடியாத செயல்.

ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. பிரச்சனையை மறைப்பதற்கு வேலைகள் நடக்கின்றன. அதற்கு  உடைந்தையானவர்களை வைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் நடப்பதாகவே தெரிகிறது. அதனால் கடைசியில் எல்லாமே சுழியம் ஆலிவிடுமோ!

இங்கே நீதி கிடைக்கவில்லை என்றால் இனி வருங்காலங்களில் இதுவே முன்னுதாரணமாகிவிடும் என்கிற அச்சம் நமக்கு உண்டு.

பொய் சொல்லக் கற்றுக்கொள்! பிழைத்துக் கொள்வாய்! என்கிறார்கள்  நவீன கால ஆசிரியர்கள்!

No comments:

Post a Comment