Sunday 20 November 2022

இனி என்ன நடக்கும்?

நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது தான் நடந்திருக்கிறது!

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பானமை கிடைக்காது என்பது தான் பொதுவான கருத்து நிலவியது. அது தான் நடந்திருக்கிறது. எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லை.

பார்க்கப் போனால் இது தொங்கு நாடாளுமன்றம் என்று தான்  சொல்ல வேண்டும்.

ஆனாலும் போகிற வேகத்தை பார்க்கும் போது முன்னாள் பிரதமர் முகைதீன்  யாசின் தனது பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மிகவும் நம்பிக்கையோடு  சொல்லி வருகிறார். அவர் போகின்ற போக்கைப் பார்க்கும் போது  பக்காத்தான் கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியாது என்று திண்ணமாக நம்புவதாகத் தெரிகிறது.

அதுவும் பதவிக்காக, எந்த எல்லைக்கும் அவர் போவார், என்பதும் அவர் பேச்சிலிருந்து தெரிகிறது. குறிப்பாக ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும். தான் எப்போது ஆட்சி அமைக்க முடியும் என்று இஸ்தானாவிலிருந்து அழைப்பு வந்திருப்பதாக அவர் கூறியது வடிகட்டின பொய் என்பது நமக்குப் புரிகிறது. மாமன்னருக்கு தேர்தல் முடிவுகள்  ஞாயிற்றுக்கிழமை தான் கிடைத்திருக்கிறது. அதன் பின்னரே இரண்டு கட்சிகளுக்கும், அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனாலும் முகைதீன்   தொடர்ந்து இஸ்தானாவுக்கு ஓர் அழுத்தம் கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்!

முகைதீன் பிரதமர் ஆவதை பெரும்பாலான மலேசியர்கள் விரும்பவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். அவர் ஏற்கனவே பிரதமராக இருந்த போது மக்களுக்குத் தான் சிரமத்தைக் கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை அவருக்குப் பதவி தான் முக்கியம். மக்களின் பிரச்சனைகளைவிட அவர் எப்படி பதவியில் நீடிக்க முடியும் என்பதில் தான் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பார்! 

அவர் ஆட்சி எப்படி அமையும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இப்போதும் அதே நிலை தான் தொடரும். காரணம் தன்னோடு சம்பந்தப்படாதவர்களை எல்லாம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் எங்கெங்கிருந்து அம்புகள் வருமோ என்று இருபத்து நான்கு மணி நேரமும் அதே பயத்தில் இருக்க வேண்டி வரும்! முன்பும் அதைத்தான் செய்தார். இனி மேலும் அதைத்தான் செய்ய வேண்டிவரும். அவர் பணத்தையும், பதவியையும் கொடுத்து ஆட்சி செய்பவர்! மக்கள் நலன் என்பதெல்லாம் அவர் கேள்விப்படாத ஒன்று!

முகைதீன்  நல்ல பிரதமராக மலேசியர்களுக்கு விளங்க முடியும் என்பதற்கான  சாத்தியம் குறைவு தான்.  அவர் ஆட்சி செய்தால் சுமார்  நூறு அமைச்சர்களாவது  அவருக்கு இருக்க வேண்டும்! அப்போது தான் அவரால் கொஞ்சமாவது மற்ற கட்சியினரை நம்ப முடியும்! அது மட்டுமா? அமைச்சர் பதவி வேண்டும், அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் கொடுக்க வேண்டும் என்று எத்தனையோ நிபந்தனைகள் வரும்!

அன்வார் ஆட்சி அமைத்தால் அவருக்கும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கித் தானே ஆக வேண்டும்? உண்மை தான்.  ஆனால் அவர் பதவிக்காக தன்னைத்  தாழ்த்திக் கொள்ளமாட்டார். அவர் கௌரவமான மனிதர். கௌரவமாகச் செயல்படுபவர்.

எப்படியோ, யார் பிரதமர் என்பது ஓரிரு நாள்களில் தெரியவரும். அதுவரைப் பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment