Wednesday 30 November 2022

நீங்க சொல்லுவது சரிதான்!

 

                            மலேசிய பிரதமர், டான்ஸ்ரீ அன்வார் இப்ராகிம்

மலேசியாவில்  15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. அல்லது ஒற்றுமைக் கூட்டணி என்றும் சொல்லலாம். ஒற்றுமைக் கூட்டணியின் பின்னணியில் மாமன்னர் இருந்திருக்கிறார். அவர் தலையீட்டினால் தான் ஒற்றுமை அரசாங்கம் அமைந்தது.

இந்தப் புதிய அரசாங்கத்தைப் பற்றி நண்பர் ஒருவர் கருத்துரைத்தார்:     

 "சரி! ம.இ.கா.வை தோற்கடித்து விட்டீர்கள்.  பாரிசான் கட்சியை ஒழித்து விட்டீர்கள். இப்போது புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அன்வார் பிரதமராக வந்து விட்டார்.

ஆமாம்! இனி மேல் உட்கார்ந்து சாப்பிடப் போகிறீர்களா? இவ்வளவு நாள் நின்று கொண்டா சாப்பிட்டீர்கள்? இப்போதும் உழைத்தால் தானே சாப்பாடு?" இப்படியாக அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்!

இவரைப் போன்றவர்கள் தங்களது சுயநலத்தையே பார்க்கின்றனர். பொதுநலத்தை அறியாதவர்கள். ஒன்றை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று  நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்கள் அல்லது தேசிய முன்னணியை ஆதரித்தவர்கள்.

ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்பதைக் கொஞ்சம் ஆராய வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்தியர்களின் நிலை பெரிய அளவில் அதாவது மற்ற இனத்தவர்களின் முன்னேற்றத்திற்கு ஈடாக இல்லை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்.  நமக்குத் தெரிந்தவரை ம.இ.கா. தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பொருளாதாரத்தை உயர்த்த முடியவில்லை.  கல்வியில்,  திறமையிருந்தும் உயர்கல்விக்குப் போகமுடியாமல் தடுக்கப்படுகிறோம். இந்தியர்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கப்படுகின்றனர். அரசாங்க வேலை வாய்ப்புகள், தனியார்துறை வேலை வாய்ப்புகள்  எதுவும்  எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இந்தியர்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிப்பதைத் தவிர  வேறு போக்கிடம் இல்லை. கோழைகளைக் கொண்ட ஒரு கட்சியை வைத்துக் கொண்டு இந்தியர்களால் என்ன செய்ய முடியும்? கட்சியை வைத்துக்கொண்டு, இந்தியர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காலங்காலமாக தலைவர்கள் சம்பாதிப்பதற்கு இந்த ஏமாந்த சமுதாயம் தான் அகப்பட்டதா, என்ன?

எதற்கும் இலாயக்கில்லாத ஒரு அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு, தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக அதனை நடத்திக் கொண்டிருப்பது அவர்களுக்கு இலாபமாக இருக்கலாம். அதனால் மக்களுக்கு என்ன இலாபம்?

ம.இ.கா. தலைவர்கள்  அத்தனை பேரும் சுயநலவாதிகள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். இனிமேலும் அவர்களைப் பாராட்டி சீராட்டி அரியனையில் அமர்த்த வேண்டும்  என்கிற நிலைமை நமக்கில்லை! இந்தியர்கள் அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பித்துவிட்டார்கள்.

இவர்கள் இனி திருந்தினாலும் சமுதாயம் இவர்களுக்குக் கதவடைப்பு செய்துவிட்டது! திறக்கப்போவதில்லை!

No comments:

Post a Comment