Tuesday 29 November 2022

இது சரியா, தவறா?


 ம.இ.கா. தேசியத் தலைவர், டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கத்திற்கு,   இந்தியர்களின் உருமாற்றத் திட்டங்களுக்காக, ம.இ.கா. தனது ஆதரவை வழங்கத் தயார் எனக் கூறியிருக்கிறார். இந்நாள்வரை ம.இ.கா. செய்துவந்த பல முயற்சிகளும் தொடர வேண்டும் என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்தியர்களின் மீது அவருக்குள்ள அக்கறையை அல்லது ம.இ.கா.வின் அக்கறையை நாம் வரவேற்கிறோம்.

அதே சமயத்தில்  இத்தனை ஆண்டுகள் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் எந்த முயற்சிகளும் செய்யவில்லை என்று யாரும் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பது தான்  நமது ஆதங்கம்.

அவர்கள் முயற்சிகள் அனைத்தும்  'ஏதோ பிரதமரிடம் மகஜரைக்  கொடுத்தோம்,  நமது வேலை முடிந்தது!' என்கிற பாணியில் தான் அவை அனைத்தும் நடந்தன! அதனுடைய சாதக பாதகங்கள் கண்காணிக்கப்படவில்லை.. தொடர்ந்து 'இந்தத் திட்டம், அந்தத் திட்டம்' என்று ஆண்டுக்கு ஆண்டு பிரதமருக்குப்  போய்க் கொண்டிருந்ததே தவிர எல்லாம் வெற்றுக் கடுதாசியாகவே ஆகிப்போகின! வேறு என்ன சொல்ல?   

அவர் எடுத்த அந்த அக்கறைக்காக நாம் பாராட்டுவோம். ஆனால் வெற்றுக் காகிதம் என்று தெரிந்த பின்னர் பக்காத்தானுக்கு அவரால் அப்படி ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது.  

எல்லாமே புதிதாக தொடங்க வேண்டிய நிலையில்  தான் இன்றைய அரசாங்க உள்ளது. உயர் கல்வியாக இருக்கட்டும், தமிழ்ப்பள்ளியாக இருக்கட்டும், பொருளாதார பிரச்சனையாக இருக்கட்டும்,  வேலை வாய்ப்பாக இருக்கட்டும்  அனத்துமே புதிதாகவே தொடங்க வேண்டிய நிலையில் தான்  புதிய அரசாங்கம் உள்ளது.

முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு அந்தக்கட்சி சரியான தலைவன் இல்லாமல் தட்டுத்தடுமாறி இன்றை நிலையில் வந்து நிற்கிறது!  இவர்கள் நிலையே தடுமாற்றத்தில் இருக்கும் போது இவர்கள் எந்த வகையில் இந்தியர்களின்  உருமாற்றத்திற்காக  உதவ முடியும்! அவர்கள் பாதை வேறு! வழி வேறு! எந்த வகையிலும் நடப்பு அரசாங்கத்துடன் ஒத்துப் போகாதது!

நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்தியர்களின் உருமாற்றத்திற்காக நமபிக்கைக் கூட்டணி சரியான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் சரியான இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.   அந்த இலக்கை நோக்கி நகர வேண்டும்.   

ம.இ.கா.,  உங்களுக்கு உதவுகிறோம் என்கிறார்கள். அதற்கான வரைபடங்கள் அவர்களிடம் உள்ளன. ஆனால் அந்த வரைபடங்கள் அவர்களுக்கே உதவவில்லை!

வேண்டாம் இந்த விபரீதம் என்பதே நமது ஆலோசனை!                                                                                                                     

No comments:

Post a Comment