Thursday 10 November 2022

அடுத்த பிரதமர் யார்?

 

                                                                         

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று  தேவையற்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

ஏற்கனவே அம்னோ தாங்கள் வெற்றி பெற்றால் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக வருவார் என்று அறிவித்திருக்கின்றனர். ஆனால் அந்த வாய் மொழி ஒப்பந்தம் மீறப்படுமா என்கிற ஒரு சந்தேகம் இப்போது எழுப்பப்பட்டிருக்கிறது!

இப்போது இந்த 15-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு தான் நடைபெற வேண்டும். ஆனாலும் அம்னோ கொடுத்த  நெருக்குதலினால் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அந்த நெருக்குதல் கூட , இஸ்மாயிலுக்கே தொடர்ந்து பிரதமர் பதவி,  என்கிற அடிப்படையில் தான் இஸ்மாயில் இந்தத்  தேர்தலுக்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் இன்று ஏனோ அம்னோ அந்த ஒப்பந்தத்தை மீறும்  என்கிற பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.   அம்னோவுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. அவர்கள் எதனையும் மீறும் இயல்பு உடையவர்கள்! சொன்ன சொல்லை அவர்கள் என்றுமே காப்பாற்றியதில்லை! அவர்களின் கூற்றுப்படி இஸ்மாயில் அப்படி ஒன்றும் வலிமையான, தகுதியான  பிரதமர் வேட்பாளர் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்!

அது மட்டும் அல்ல. நாட்டின் பிரதமர் என்றால் அவர் அம்னோ கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்பது அம்னோ உறுதியாக நம்புகிறது. அதனை அக்கட்சி விட்டுக் கொடுக்காது என்பது உறுதி. அதுவே அவர்களிடம் உள்ள நடைமுறை!   அந்த நடைமுறையோடு ஒரு சில நீதிமன்ற ஊழல்  வழக்குகள்  இருக்க வேண்டும் என்கிற நடைமுறையும் இப்போது நடப்புக்கு  வந்துவிட்டது!

இப்படி ஒரு சூழலில் அம்னோ கட்சியின் தலைவராக இல்லாத ஒருவரை அவர்கள் எப்படி நாட்டின் பிரதமராக வருவதற்கு ஒப்புக் கொள்வார்கள்? அது தான் இன்றைய பிரச்சனை!  காலங்காலமாக அம்னோ தலைவர் தான் நாட்டின் பிரதமர். அதுவே ஒரு பாரம்பரியமாக வந்துவிட்டது. அதனை அவர்கள் விட்டுக் கொடுக்கத்  தயாரில்லை.  இன்று அவர்கள் விட்டுக் கொடுத்தார்களானால் மீண்டும் இப்படி ஒரு நிலை வரலாம்.  அதனால் பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பது தவறு என்பது அவர்களது எண்ணமாக இருக்க வேண்டும்.

எப்படியோ தேர்தல் முடியும் வரை இந்தப் பேச்சு தொடரந்து கொண்டு தான் இருக்கும். தேர்தலுக்குப் பிறகு தான் ஒரு முடிவுக்கு வரும். அம்னோ ஆட்சி அமைக்குமா என்று சொல்லுவதற்கில்லை. அதுவும் சந்தேகத்திற்கு உரிய ஒன்று தான். அதனால் இப்போதைக்கு இது பற்றி பேசுவதில் எந்த ஒரு புண்ணியமும் இல்லை.

அடுத்த பிரதமர் யார்? பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment