Saturday 14 July 2018

ஏன் இந்த அவசரம்...?


அவசர அவசரமாக செய்கின்ற  காரியங்கள் நம்மைச் சிதறித்து விடும். அதனால் நிதானமாக உங்கள் காரியங்களைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்  என்பது தான் மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் இலவச ஆலோசனை. ஆனால் எல்லாக் காரியங்களிலும் நாம் அப்படி இருக்க முடியாது

 இதனை நான் சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.  மிக, மிக அவசரம் என்பதாக ஒன்றும், அவசரம் என்பதாக ஒன்றும், நிதானம் என்பதாக ஒன்றும் நாமே ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். அதன் படி செயலாற்றலாம்.

பக்காத்தான் அரசாங்கம் அமைந்து இன்னும் மூன்று மாதங்கள் ஆகவில்லை. ஒரு சில விஷயங்களில் சீனர்கள் காட்டுகின்ற தீவிரம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! சான்றுக்கு சீன உயர்க்கல்வி பயில யூ.இ.சி. என்னும் நுழைவுத் தேர்வை அரசின் சட்டப்பூர்வமாகக் கொண்டு வர அவர்கள் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அறியும் போது நாம் ஏன் அப்படிச் செயல்பட முடியவில்லை என நினைக்கத் தோன்றுகிறது! அவர்களுக்கு அது 43 ஆண்டுகள் போராட்டம். அதன் அருமை அவர்களுக்குப் புரிகிறது.  சீனக்கல்விக் குழு "சோங் டோங்"  உடனடியாக சீனத் துணைக் கல்வி அமைச்சரைச் சந்தித்தது.  இந்த ஆண்டுக்குள்  யூ.இ.சி. பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவர் என நம்பலாம். இது மிக மிக அவசரம். நாளை எதுவும் நடக்கலாம்.  எந்த ஆபத்தும் நமக்கு வேண்டாம். இப்போதே அதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்கிற மிக மிக அவசரம்  காட்டுவது இயல்பு தானே! இன்னொரு சீனப்பள்ளியையும் கட்டுவதற்கான வேலைகளையும் அவர்கள் ஆரம்பித்து விட்டனர்.

சில ஆண்டுகளுக்கு  முன்னர் பேராக் மாநிலத்தில்1000 ஏக்கர் நிலம் சீன இடைநிலைப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. சீனப் பள்ளிகள்  உடனடியாக களத்தில் இறங்கின.  காடுகளை அழித்து மரங்களை வெட்டி விற்பனை செய்ததில்  பணம் பார்த்தனர். உடனடியாக செம்பணை  மரங்களை  நட ஆரம்பித்தனர்.   இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறுவடையையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இப்போது சீன இடைநிலைபள்ளிகளின் பொருளாதார சிக்கல்கள்  ஓரளவு  தீர்ந்து விட்டன.

தமிழ்ப் பள்ளிகளுக்குக்  கொடுத்த  2000 ஏக்கர்  நிலம் "நிலத்தையே காணோம்!"  என்கிற  நிலைமையில்  போய்க் கொண்டே  இருக்கிறது!  யார் பொறுப்பு  என்பதெல்லாம்  இன்னும்  தெரியவில்லை.  இந்நேரம்  சம்பந்தப்பட்ட  திருடர்களை  "உள்ளே"  தள்ளியிருக்க  வேண்டும்.  ஆனால் இன்னும் அது  நடக்கவில்லை!  ஒவ்வொரு  திருடனையும்  சீக்கிரம் நடப்பு  அரசாங்கம் ஏதாவது  செய்தால்  தான்   இருக்கிறவன்  பயப்படுவான்.

அதான் சொன்னேன்.  சீனர்கள்  வாய்ப்புக் கிடைத்ததும் மிக மிக வேகமாக வேலைகளைச்  செய்ய  ஆரம்பித்து விடுகிறார்கள்.  அந்த வேகத்திற்குக்  காரணம்  பின்னால்  எந்த  ஆபத்துக்களும்   வரமாலிருக்க  ஓர்  எச்சரிக்கை  உணர்வு  அவர்களிடம்  இருக்கிறது.  நாமோ எல்லாம் கைவிட்டுப்  போன பிறகு  எல்லாத்  தலைவர்களைப்  பற்றியும்  குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பக்காத்தான் அரசாங்க  இந்தியத்  தலைவர்களைத்  தான் இந்த சமூகம்  நம்பிக் கொண்டிருக்கிறது. அவர்கள்  கொடுத்த  தேர்தல்  வாக்குறுதிகள்  நிறை வேறும் என எதிர்ப்பார்ப்போம்!

மிக மிக அவசரமானவைகளை, தலைவர்களே, தள்ளிப்போட  வேண்டாம்!

No comments:

Post a Comment