Monday 30 July 2018

நூறு நாள்கள் போதுமா...?

தேர்தல் சமயத்தில்  -  பக்காத்தான் கட்சி தேர்தல் பிரசாரத்தின் போது - ஒரு சில காரியங்களை நூறு நாள்களில் நாங்கள் செய்த முடிப்போம் என்று அறிவித்திருந்தனர்.  சிலவற்றைத்  தவிர பெரும்பாலும் செய்த  முடிக்கக் கூடிய காரியங்கள் தான்.

இப்போது பிரச்சனை செய்ய முடியுமா என்பதல்ல. செய்யக் கூடாது என்று சில தரப்பினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுவும் முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஆதரவாளர்கள் - நஜிப்பையும் சேர்த்துத் தான் = பலவகையான முட்டுக்கட்டைகளைப் போட்டு அரசாங்கம் இயங்க விடாமல் கோணங்கித்தனங்களையெல்லாம்   பண்ணிக் கொண்டிருக்கின்றனர்! 

எதுவாக இருந்தாலும் அதனை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்!. "அது சரியில்லை! இது சரியில்லை!"  என்று ஒவ்வொன்றுக்கும் குற்றம் கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்! 

எதற்கு எடுத்தாலும் "இஸ்லாம் அவமதிப்பு, மலாய் மொழி அவமதிப்பு, மலாய் ஆட்சியாளர் அவமதிப்பு" என்று தொடர்ந்தாற் போல குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்! 

அம்னோ தரப்பு என்ன சொல்ல வருகிறார்கள்? பக்காத்தான் அரசாங்கத்திற்கு "இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியவில்லை! மலாய் மொழி என்றால் என்னவென்று தெரியவில்லை! மலாய் ஆட்சியாளர் என்றால் என்னவென்று தெரியவில்லை!" என்று ஒவ்வொரு நாளும்  புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் பள்ளிவாசலில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொள்ளுகிறார்கள்! ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்!

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை அவர்களுக்கு அகப்பட்டுக் கொள்கிறது. லிம் கிட் சியாங் இஸ்லாம் பற்றிச் சொன்னார், குலசேகரன் மலாய் குடியேறிகள் என்றார், ராமசாமி தீவிரவாதி - இப்படி ஏதோ ஒன்று அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது!

இவர்களின் நோக்கம் என்ன? முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்குகள் நெருங்க நெருங்க,  அவர்கள் அரசாங்கத்திற்கு இன்னும் நெருக்குதல்களை உண்டாக்க வேண்டும் என்பது தான் பிரதானமான நோக்கமாக இருக்க வேண்டும்.  அரசாங்கத்திற்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும். நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முக்கியமாக அவர்களுக்குத் தேவைப்படுவது:  "இஸ்லாம், மலாய் மொழி,  மலாய் ஆட்சியாளர்"!

இது போன்ற நெருக்குதல்கள் ஏற்படுத்தி அரசாங்கத்தின் கவனத்தை திசைத்திருப்பி அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுப்பது தான் அம்னோவின் நோக்கம்!

எது எப்படி இருந்தாலும் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளது. அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைத் தாமதப் படுத்தலாம். ஆனால் தடை செய்ய முடியாது! தடையும் போட முடியாது. தவளைகள் கத்தலாம். எதனையும் கட்டுப்படுத்த முடியாது!

No comments:

Post a Comment