Wednesday 15 February 2023

அப்படி அவர் என்ன செய்துவிட்டார்?


 பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் நமது அரசாங்கதில் உள்ள ஒரு குறைபாட்டை சுட்டிக் காட்டினார்.

அவர் கூறிய குற்றச்சாட்டை இதுவரை யாரும் மறுக்கவில்லை. அவர் சொன்னது உண்மை என்பது அனைவருக்கும் தெரிகிறது. ஆமாம்,  அரசாங்கத் துறைகளில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பதாக அவர் கூறியிருந்தார். ஒரு குறிப்பிட்ட இனமே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது இந்த ஊரே அறிந்தது தான். 

இந்தக் குறை எத்தனையோ முறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இது நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. அனைவரும் அறிந்தது தான்.  ஆனால் இந்த முறை ஏன் இந்தப் பிரச்சனை பெரிய அளவில் பேசுபொருளாக மாற்றப்பட்டிருக்கிறது?  ஒரே காரணம் தான். பல மாநிலங்களில் மாநிலத் தேர்தல்கள் விரைவில் நடைபெற விருக்கின்றன. மலாய் வாக்காளர்களை, இப்போது ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது  வெறுப்பேத்த  அதுவும் குறிப்பாக  பிரதமர் அன்வார் மீது வெறுப்பை ஏற்படுத்தி அவரை வீழ்த்துவது  என்கிற ஒரு திட்டத்தை  பெரிகாத்தான் கூட்டணியினர் ஓரு இலட்சியமாகவே வைத்திருக்கின்றனர்.  அது தான் முன்னாள் பிரதமர் முகைதீன் கொண்டிருக்கும் மாபெரும் கனவு. 

முகைதீனைப் பற்றி இந்தியர்கள் அதிகமாகவே அறிந்து வைத்திருக்கிறோம். பொதுவாகவே அவர் இந்தியர்களுக்கு எதிரானவர் என்பது நமக்குத் தெரியும். இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையில் அவர் இந்தியர்களுக்கு எதிராகவே செயல்பட்டவர். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அதனால் தான்  மலாய்க்காரர்களை,  இந்தியர்களுக்கு எதிராக, பேராசிரியர் இராமசாமிக்கு எதிராகத்  தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!

இந்தியர்களைப் பொறுத்தவரை பேராசிரியர் இராமசாமி  எந்த ஒரு தவறும் இழைத்ததாக நமக்குத் தெரியவில்லை.  இந்தியர்களின் தேவையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இது நாம் எல்லாகாலங்களிலும் கேட்கின்ற கேள்வி தான். புதிது அல்ல. இப்போது  எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கையில் எடுத்திருப்பதால் ஒரு வேளை அது அவர்களுக்குப் புதிதாக இருக்கலாம், நமக்குப் புதிதல்ல!

பினாங்கு துணை முதல்வர் பேசியதில் எந்தத்  தப்புமில்லை என்பதில் நாமும் அவரோடு சேர்ந்து குரல் கொடுக்கிறோம்.  இப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனையையும் மறைத்து மறைத்து இப்போது நமக்கும் மரத்துப் போய்விட்டது! வாயை மூடிக்கொண்டே இருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை!

வாயையே திறக்காத தலைவர்களை நாம்  கொண்டிருந்தோம்! இப்போது நாம் வாயைத் திறக்க ஆரம்பித்து விட்டோம்!

No comments:

Post a Comment