Monday 27 February 2023

இனி என்ன ஆகும்?

மித்ராவைப் பற்றி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.  வழக்கம் போல 10 கோடி வெள்ளி இந்தியர்களின் உருமாற்றத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

எலாம் வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கிறது. பலகாலமாகவே செடிக் அல்லது மித்ரா அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டு சின்னா பின்னாமாக்கி விட்டார்கள்! 

சின்னாபின்னாமானவர்கள்  மக்கள் தான். அரசியல்வாதிகள் தங்களது இருப்பை கொஞ்சம் அதிகரித்துக் கொண்டார்கள். தங்களுக்குப் போக மிச்சம் மீதி இருந்ததை அரசிடம் திரும்பவும் ஒப்படைத்து விட்டார்கள்!  அந்த வகையில் நமது அரசியல்வாதிகள் மகா யோக்கியமானவர்கள்!

மித்ரா மூலம் இந்தியர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று சொன்னாலும் பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் தாம்! அரசியல்வாதிகளும் இந்தியர்கள் தானே! பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள்  மித்ரா மூலம் தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்கள்! குறை சொல்ல ஒன்றுமில்லை! அவர்களும் இந்தியர்கள் தானே என்று திருப்தி அடைந்து  கொள்ள வேண்டியது தான்!

ம.இ.கா. வினர் ஏற்படுத்திய பயத்தில் இப்போது அரசியல்வாதிகள் என்றாலே  நாம் பயப்பட வேண்டியிருக்கிறது! இப்போதும் கூட மித்ரா அமைப்புக்கு தலைமை தாங்குபவர்கள் அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும்.

நம்முடைய சிபாரிசு என்னவென்றால்  மித்ராவுக்குத் தலைமை தாங்குபவர் ஒரு பொருளாதார நிபுணராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த முறை அரசாங்கம் ஒதுக்கிய 10 கோடி வெள்ளி முற்றிலுமாக வியாபாரத்துறைக்கே ஒதுக்க வேண்டும். சிறு தொழில், குறுந்தொழில், பெருந்தொழில் அனைத்து தொழில்களுக்கும் மித்ரா பணம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மித்ரா இப்போது பிரதமர் அமைச்சின் கீழ் இருப்பதால் எல்லாம் சரியாகவே போகும் என நம்பினாலும்  இதற்கு முன்னும் பிரதமர் துறையின் கீழ் இருந்தும்,   அப்போதும் கூட ம.இ.கா.வினர் மித்ராவை விட்டுவைக்கவில்லை! காலில் போட்டு மிதி மிதி என்று மிதித்தார்கள்! ஆக அரசியல்வாதிகள் தாங்கள் திருட்டிலிருந்து தப்பிப்பதற்குக் கூடவே ஒரு படித்த கூட்டத்தை வைத்து செயல்படுகிறார்கள்! என்ன செய்ய?

இந்த முறை எல்லாம் சரியாகப் போகும் என நம்புவோம்! கடைசியாக மகாகவி பாரதியார் சொன்னது தான்:  படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான்! போவான்! ஐயோ என்று போவான்!

No comments:

Post a Comment