Monday 20 February 2023

அப்பாடி! இத்தனை பட்டங்களா!

 

                          Welin Kusuma  - Now aiming for his 41st Degree in Library Science

மேலே காணப்படும் வெலின் குசுமா என்னும் பெயருடைய இந்தோனேசியர் படிக்காத படிப்பு இல்லை என்றே  சொல்லலாம். அந்த அளவுக்குப் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டங்களைப் பெற்று, தொடர்ந்து படித்து, மேலும் படித்து,  பட்டங்களைப் பெற்று,தொடர்ந்து கொண்டே போகிறார்! கல்விக்கு  ஏது எல்லை என்பதைக் கொள்கையாகவே கொண்டிருக்கிறார்!

குசுமாவுக்கு இப்போது வயது 41. இந்த வயதில் 41-வது பட்டத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். இம்முறை "நூலக அறிவியல்"துறையில் பட்டம் பெறும் எண்ணம் கொண்டிருக்கிறார். நாம் என்ன படிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர் அதனை ஏற்கனவே படித்து முடித்துவிட்டார்!

கடந்த 2012-ம் ஆண்டில் இந்தோனேசியாவில் அதிக பலகலைக்கழகப் பட்டங்களைப் பெற்றவர் என்று இந்தோனேசிய  மியுசிம் சாதனைப் புத்தகத்தில் அவர் இடம் பெற்றிருக்கிறார். அப்போது அவருடைய சாதனை என்பது 32 கல்வித்துறை பட்டங்கள். இன்றைய நிலையில் அந்தப் பட்டங்கள் 40 ஆக கூடிவிட்டன! இப்போது அடுத்து தனது 41-வது பட்டத்துக்கான வேலைகளில் ஈடுப்பட்டிருக்கிறார்.

குசுமாவிடம் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஐந்து பாடங்களை எடுத்து அந்த ஐந்து  பாடங்களுக்கும் ஐந்து பட்டங்களையும் பெற்றிருக்கிறார்! அந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்குச் சுமார் 15 மணி நேரம் அவர் படிப்பாராம்! அதாவது காலை மணி ஏழு  தொடங்கி இரவு பத்து வரை அவர் படிக்கின்ற நேரமாக இருக்குமாம்!

இப்படி  பட்டங்களை அடுக்கிக் கொண்டே போகும் இந்தப்
 பழக்கம் எப்படி வந்தது? ஏன்? எப்படி? என்று சொல்ல முடியாவிட்டாலும் அவர் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போது இப்படி ஒர் ஆசை  அவரிடம் ஒட்டிக்கொண்டதாம். பல்கலைக்கழகங்கள்  ஒரு பொழுது போக்கும் மையமாகவே அவருக்கு மாறிவிட்டதாம்!

கல்வியில் பட்டங்களைப் பெறுவதைத் தவிர்த்து இன்னொரு சிறப்பையும் அவர் கொண்டிருக்கிறார்.   தட்டச்சு செய்யும் போது அவர் தனது பத்து விரல்களையும் பயன்படுத்த முடியுமாம்.  ஆமாம் நம்மால் இரண்டு மூன்று விரல்களையே பயன்படுத்த முடிகிறது!  அப்படி என்றால் பத்து விரல்கள் என்பதும்  சாதனை தானே!

எதிர்காலத்தில் இன்னும் எத்தனை பட்டங்களைப் பெறப்போகிறாரோ நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் அவரின் எதிர்காலமே பட்டங்களைப் பெறுவது தான் என்றே தோன்றுகிறது!

மிகச் சிறந்த கல்வியாளர் உருவாகி வருகிறார்! வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment