Wednesday 22 February 2023

அழிந்து வரும் அலுங்குகள்!

 

கடந்த 18-ம் தேதி உலக அலுங்குகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

பொதுவாக இது போன்ற விலங்குகள் பற்றியெல்லாம் நாம் எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாததில் எந்த ஆச்சரியமும் இல்லை. நமக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விலங்கு. அதற்கு மேல் பலர் இந்த விலங்கை பார்த்திருக்கக் கூட மாட்டார்கள்!

நானும் உங்களைப் போலவே இந்த பாலூட்டியைப் பற்றி அதிகம் அறியாதவன்.

இரண்டு விஷயங்களுக்காக நான்  இந்த கட்டுரையை எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த தமிழ் நாட்டு தொலைக்காட்சி செய்தி.  அப்போது இந்த விலங்கை தமிழ் நாட்டில் ஊட்டியில் கண்டு பிடித்திருக்கிறார்கள். கண்டு பிடித்தவர்களுக்கு அது ஒரு புதிய விலங்காக இருந்திருக்கலாம். அதற்கு முன்னர் அவர்கள் பார்த்திராத விலங்காக இருக்கலாம். அதன் பெயர் என்ன, அது என்ன விலங்கு என்பது அவர்களுக்குப் புரியவில்லை!

அதன் பின்னர் அவர்கள் அந்த விலங்கை 'எறும்பு தின்னி' என்றார்கள். எறும்புகளைத் தின்னும் விலங்கு என்பதால் அப்படி ஒரு பெயர்! முற்றிலுமாக அவர்களுக்கு அது ஒரு புதியவகை விலங்கு. ஆனாலும் நம் நாட்டில் அந்த விலங்கை அலுங்கு என்கிற பெயரில் தான் அழைக்கிறோம்.  எனது இளம் வயதில் நான் அடிக்கடி பார்த்த ஒரு விலங்கு தான் அது. சமைத்தும் சாப்பிட்டிருக்கிறோம். அப்போது தோட்டப்புறங்களில் பன்றி வேட்டைக்குப் போகுபவர்கள் சமயங்களில் இதனையும் வேட்டையாடி வருவார்கள். அந்த விலங்கை இப்போதும் அலுங்கு என்று தான்  நாம் சொல்லுகிறோம். 

இப்போது  இந்த விலங்கு உலகளவில் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சட்டவிரோதமாக இந்த விலங்குகள் கடத்தப்படுகின்றன. ஒன்று  சீன பாரம்பரிய மருத்துவத்திற்கு இந்த விலங்குகள் தேவைப்படுகின்றன. அடுத்து   அதன் இறைச்சி சுவையாக இருப்பதினால் உணவுக்காகவும் அலுங்குகள் கடத்தப்படுகின்றன.  நமது நாட்டில் அதன் இறைச்சியின் விலை ரி.ம. 1500.00  வெள்ளி ஒரு கிலோ என்கின்றனர். இந்த விலங்கு எந்தவித தீங்கும் செய்யாத ஒர் இனம். அதுவே அதன் அழிவுக்குக் காரணமாகிவிட்டது! நல்லவனுக்குக் காலம் இல்லே என்று சொல்லுகிறோம் அல்லவா!

பெரும்பாலான நாடுகளில் இந்த விலங்கு பாதுகாக்காப்பட்ட  ஒரு விலங்காகவே இருந்து வருகிறது. மிகவும் அருகிவிட்ட இது போன்ற விலங்குகளை பாதுகாப்பது அரசின் கடமை. மிகவும் பாவப்பட்ட ஓர் இனமான இந்த அலுங்குகள்  பாதுகாக்கப்பட  வேண்டும்  என்பதே நமது அவா!

No comments:

Post a Comment