Wednesday 10 May 2023

அடி! அடி! சாகும்வரை அடி!

 

           தேரை இழுக்கும் காளைகள் - சித்ரா பௌர்ணமி,தெலுக் இந்தான்

சித்ரா பௌர்ணமி  கொண்டாட்டம்  என்றால் அதற்குப் பெயர்பெற்ற  இடம் தெலுக் இந்தான் என்பது நாம் அறிந்ததுதான்.

ஆனால் இந்த ஆண்டு திருவிழா நாடெங்கிலும் புகழ்பெற்று விட்டது,  தவறான காரணங்களுக்காக!

நம்மால் ஒரு சில விஷயங்களைப் புரிந்த கொள்ள முடியவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் எப்போதும் நடப்பது தான்.  காளைகள் வைத்து தேர்களை இழுப்பார்கள். அதற்கும் காளைகள் பழக்கப்பட்டவைகள் தான்.

கோவிட்-19 தொற்று கடந்த சில ஆண்டுகளாக  ஏற்படுத்திய  தாக்கத்தினால்  தேர் இழுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் போயின. அதன் பின்னர் தேர் இழுக்கும் காளைகளுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படவில்லை. அதன் விளைவு தான் மேற் கூறப்பட்ட மனிதாபிமானமற்ற அந்த நிகழ்ச்சி.

ஒரே ஒரு பக்தரின் செய்கையினால் தேர்விழாவின் நோக்கமே மாறிப்போய்விட்டது. கௌரவமாக பக்தர்கள்  பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் கௌரவமற்ற முறையில் ஒருவர் நடந்து கொண்டது தேர்த்திருவிழாவையே திசை திருப்பிவிட்டது.

கோயில் திருவிழா  சிறப்பாக நடந்தால் அந்தக் கோயில் நிர்வாகத்திற்கு நமது பாராட்டைப் பொழிகிறோம். ஆனால் கோயில் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் "அடி!  அடி! சாவும்வரை அடி!" என்று  ரௌடிகளில்  ஓருவர் போல் பேசினால் அதனை என்னவென்று சொல்லுவது? கோயில் நிர்வாகம் ரௌடிகளின் கையில் மாற்றப்பட்டு விட்டதோ என்று தான் எண்ணத் தோன்றும்.

நடந்தது நடந்தது தான். பேசிப்பயனில்லை. நாம் பொதுவான ஒரு கருத்தைச் சொல்லுகிறோம். இனி எந்தவொரு கோவில் நிர்வாகமாக இருந்தாலும் காளைகளைப் பயன்படுத்துவதை  தவிருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இப்போதெல்லாம் தேர்களை இழுக்க பலவித வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.  இனி அனைத்து கோயில் நிர்வாகங்களும் நவீன முறையில் எது சரியோ அதன்படி மாறிக்கொள்ளுங்கள். அதைத்தான் நாம் சொல்ல முடியும்.

அன்று மட்டும் அந்த காளைகள் தடுமாறி விழுந்து,  தேரும் கவிழ்ந்து - அப்படி ஓர் அசாம்பாவிதம் நடந்திருந்தால்  என்ன ஆகியிருக்கும்? நாட்டுக்குக் கோளாறு, உலகத்திற்குக் கோளாறு என்று கதை  கட்டியிருப்பீர்கள். தவறு செய்வது நீங்கள்.  பழியோ அந்த காளைகள் மேல் போயிருக்கும். நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.

வாயில்லா ஜீவன்களை வதைப்பவர்களுக்கு இறைவன் நல்வழி காட்டட்டும்!

No comments:

Post a Comment