Friday 19 May 2023

இது ஏன் நடக்கிறது?

 

வேலைக்கு ஆள் தேவை. ஆனால் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க தேவையில்லை  என்றால் எத்தனை ஆனந்தம்!

ஒரு சில இந்திய உணவகங்களில் இதனைப் பார்த்தோம். இல்லையென்று யாரும் மறுக்க முடியாது.  அதனாலேயே தமிழ் நாட்டினர் மலேசிய வருவதைத் தவிர்க்கின்றனர்.  இப்போது அரபு நாடுகளுக்குச் செல்வது உத்தமம் என்று நினைக்கின்றனர்.  எந்த நாடுகளுக்குப் போனால் என்ன சரியான ஆவணங்கள் இன்றி போனால் எங்குப் போனாலும் தலைமேல் கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்! பயமுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்!

ஒரு சில பெரும் நிறுவனங்கள் கூட தங்களது தேவைக்கேற்ப வெளிநாட்டுத் தொழிலாளர்களை எடுப்பதில்லை.  கூடுதலாக எடுப்பதும் அவர்களுக்கு வேலைகளைக் கொடுக்காமல் இழுக்கடிப்பதும்  சாதாரணமாகவே நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பெரும் நிறுவனங்கள் அதனைச் செய்யாவிட்டாலும் அவர்கள் நியமித்திருக்கும்  இடைத்தரகர்கள்   அதனைச் செய்யத்தான்  செய்கின்றனர். தொழிலாளர்களை இங்கு வரவழைத்த பின்னர் தான் அந்தத் தொழிலாளர்களுக்கான வேலைகளைத் தேடி அலைகின்றனர்!

வேலை கிடைக்காவிட்டால் அவர்கள் தங்குவதற்கு வசதிகள் இல்லை.  சம்பளம் இல்லை. ஏற்பாடுகளைச் செய்த இடைத்தரகர்கள் எங்கேயாவது மறைந்து போய் விடுகின்றனர். பிரச்சனைகள் வரும் போது ஓடி ஒளிந்து கொள்கின்றனர்!

அந்த சமயத்தில் தான் ஏதோ ஒரு வேலையை அந்த நிறுவனங்கள்  அவர்களைச் செய்ய வைக்கின்றனர். எங்கேயாவது தள்ளிவிட்டால் போதும் என்கிற நிலைமைக்கு அவர்கள் வந்து விடுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏதோ ஒரு சில கல்வித்தகுதிகளை  வைத்துக் கொண்டு நாட்டுக்குள் வருகின்றனர்.  கௌரவமாக வேலை செய்து பிழைக்கத்தான் இங்கு வருகின்றனர். ஆனால் அவர்களை இந்த இடைத்தரகர்கள் அவர்கள் கனவிலும் நினைக்காத வேலைகளை அவர்கள் தலைமீது கட்டிவிடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் இந்த இடைத்தரகர்களுக்குப் போதுமான தண்டனைகளைக் கொடுப்பதில்லை.  "எங்களை யார் என்ன செய்ய முடியும்?"  என்கிற இறுமாப்பு தான் அவர்களை எப்படி வேண்டுமானாலும் செயல்படத் தூண்டுகிறது.

வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை வருவிக்கும் இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தையே கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வெளிநாட்டவர்கள்  தங்களது சொத்து சுகங்களை விற்று  இங்கு வருகிறார்கள்.  வருகின்ற இடத்தில் ஏமாற்றம், ஏய்ப்பு என்று அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கடுமையான சட்டதிட்டங்கள் இல்லையென்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்கிற நிலைமை தான் ஏற்படும்! அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment