Friday 12 May 2023

நம்பிக்கை அளிக்கிறது!



புள்ளிவிபரத்துறை வெளியிட்டியிருக்கும் புள்ளிவிபரங்களின் படி நாட்டின் வேலைவாய்ப்புகள் ஒரு சிறிய அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதற்காகப் பெருமைப்படலாம். 

அதுவும் இல்லாவிட்டால் நாம் என்ன செய்யப்போகிறோம்? ஏதோ அந்த அளவுக்காவது முயற்சி செய்திருக்கிறார்களே அதற்காக பாராட்டுவோம். ஒரு நல்ல அரசாங்கம் இருந்தால் நல்லது நடக்கும். அது நிச்சயம். நடப்பு அரசாங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

ஆனாலும் ஒருசில விஷயங்கள் மனத்தை நெருடத்தான் செய்கின்றன. நம்மைச் சுற்றிப் பேசப்படுகின்றவை, காண்கின்றவை நல்ல செய்திகளாக எதுவும் இல்லை. "இந்தியர்களுக்குத் தான் எந்த வேலை வாய்ப்புக்களும் கொடுக்கப்படுவதில்லை" என்று நமது மக்கள் சொல்லும் போது  "நமக்கு மட்டும் விடிவுகாலம் இல்லையா?" என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஏதோ சுப்பர் மார்க்கெட் போன்ற பெரும் அங்காடிகளில் ஒரு  சில வேலைகளாவது நமது பெண்கள், இளைஞர்கள் செய்து வந்தனர். அதுவும் இப்போது வெளிநாட்டவர்களுக்குத் தாரைவார்த்து விட்டனர். கேட்டால் நாட்டில் மனிதவளம் இல்லையாம்!

நமக்கு இன்னும் ஒரு சில விஷயங்கள் புரியவில்லை.  இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன. ஆனால் நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் ஒன்றும் அறியாதவர்களா? அவர்களுக்கு மட்டும் இப்படி  ஒரு செய்தி உலவுகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்களா?

மலாய்க்காரர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அம்னோ இளைஞர் பகுதியினர்  களத்தில் இறங்கி விடுவர். அவர்கள் இப்போதும் செய்வர்.  அப்போதும் சரி இப்போதும் சரி ம.இ.கா.வினர்  களத்தில் இறங்கும் பழக்கம் இல்லாதவர்கள். இப்போது பி.கே.ஆர். கிளைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். எங்கே என்று தான் தெரியவில்லை! யாரை அணுகுவது? கிளை தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்கள்  பிரச்சனைகளை அவர்கள் தான் தலைமைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இனியும் வாய்மூடி மௌனிகளாக இருக்க முடியாது.

பிரதமர் அன்வாரை ஆதரிக்கிறோம் என்பதற்காக நமது பிரச்சனைகளை மூடி மறைக்க வேண்டும் என்கிற அவசியம் நமக்கு இல்லை. அவரை நாம் நம்புகிறோம். நல்லது செய்வார் என இனியும் நம்புவோம். அதற்காக நமது பிரச்சனைகள் பேசப்படாவிட்டால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை.

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்பது நல்ல செய்தி. அந்த அதிகரிப்பினால் நமது சமுதாயமும் பயன் பெற வேண்டும் என்பது நமது செய்தி. இனியும் சாக்குப் போக்குகள் வேண்டாம்  ஏற்கனவே பலவற்றைப் பார்த்தாகிவிட்டது. இனியும் ம.இ.கா. பாணி அரசியல் நமக்கு வேண்டாம்.

நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமுதாயமும்,  ஒவ்வொரு துறையிலும்,  பங்குப் பெற வேண்டும். ஏற்கனவே தவற விட்டதின் பாதிப்பு  இன்னும் தீர்ந்த பாடில்லை. புதிய பாதிப்புகள் எதுவும் வேண்டாம்.

சாதாரண வேலைகள் கூட இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால்  அவர்கள் எங்கே போக முடியும்?  அவர்கள் மட்டும் பிழைக்க வேண்டாமா? உயிர் வாழ வேண்டாமா?  அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி பயில வேண்டாமா?  நமது பிரதிநிதிகள் இது போன்ற பிரச்சனைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சென்று தீர்வு காண முயல வேண்டும். 

ஒரு சிலரைப் பார்க்கும் போது ஏன் இவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது!

நாட்டில் வேலை வாய்ப்புகள் ஏற்படும் போது அதில் இந்தியர்களும் பயன்பெற வேண்டும் என்பது தான் நமது எண்ணம். நம்புவோம்!

No comments:

Post a Comment