Friday 26 May 2023

பாராட்டுகிறோம்!

 

             எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்; முத்தமிழ் செல்வி

எவரஸ்ட் சிகரத்தை எத்தனை எத்தனையோ பேர்  எட்டியிருக்கலாம். அப்படி எட்டியோர்களில் பெண்களும் அடங்குவர்.

ஆனால் எவரஸ்ட் சிகரத்தை  எட்டிய முதல் தமிழ்ப்பெண்  என்றால் அவர் தான் தமிழ் நாடு, விருதுநகர் மாவட்டத்தைச்  சேர்ந்த முத்தமிழ்செல்வி.   வயது 34. இரண்டு குழந்தைகளின் தாய். சென்னையில் ஜாப்பனிய மொழி ஆசிரியராகப் பணி புரிகிறார்.

 தமிழ்ப் பெண்கள் பல சாதனைகளைப் புரிந்திருக்கின்றனர். இப்போதும் புரிந்து வருகின்றனர்.  வருங்காலங்களிலும் புரிவதற்கான  சாத்தியக் கூறுகள் அதிகம். ஏன் வாய்ப்புகள் கொடுத்தால் நமது நாட்டிலும் அது நடக்கும்!

இன்றைய காலங்களில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மலையேறுவதை எளிமையாக்கி விட்டனர். ஆனாலும் நாம் நினைப்பது போல அது ஒன்றும் எளிதான  காரியம் அல்ல.  இன்றும் அது ஆபத்து நிறைந்த பயணம் தான்.

மலையேற செல்விக்கு சுமார் ஐம்பத்தாறு நாள்கள் பிடித்தன. எவரஸ்ட் உச்சியை  அவர் மே மாதம் 23-ம் தேதி, செவ்வாய் கிழமை அன்று சென்று அடைந்தார். அவர் மீண்டும் காத்மாண்டுவுக்கு வெள்ளிக்கிழமை அன்று  திரும்பினார். அவர் கீழே இறங்குவதகான ஹெலிகாப்டர் ஏற்பாடுகளை  தமிழ் நாடு அரசாங்கம்  செய்திருந்தது.   அத்தோடு  இந்தப் பயணத்திற்காக பத்து இலட்சம் ரூபாய் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

அவர் பயணத்தை  மேற்கொண்டிருந்த போது, போகும் வழியில் அவரது நேப்பாள வழிகாட்டியான  பம்ப்பா என்பவருக்கு  நோய் கண்டு பயணத்தைத் தொடர முடியாமல் போய்விட்டது. அது மட்டும் அல்ல. அவருடைய குழுவில் பங்குப் பெற்ற இருவர் மரணமடைந்தனர்.  இன்னும் சிலர் காயமடைந்தனர். இதெல்லாம் நடக்கும் என்பதை அறிந்தவர் அவர். ஆனாலும் எப்பாடுபட்டாவது மலையை அடைந்தே தீருவேன் என்று சங்கல்பம் செய்து கொண்டார் முத்தமிழ்ச் செல்வி.  சாதித்தும் விட்டார்.

ஏன் நமது நாட்டிலிருந்து எவரஸ்ட் மலை ஏறப்போனவர்களில்  ஒருவர்  உயிரிழந்திருக்கிறார்.  இன்னொருவர் மலை உச்சியை அடைந்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை. இந்த ஆண்டு அதிக, சுமார் 12,  உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஆக,  எவெரஸ்ட் பயணம் என்பது, என்னதான் நவீனங்கள் நிறைந்து இருந்தாலும், பயணம் என்னவோ இன்னும் ஆபத்தான பயணமாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அத்தனை துன்பங்களையும், துயரங்களையும் கடந்து தான் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார் முத்தமிழ்ச்செல்வி. தமிழ் நாட்டின் முதல் எவரஸ்ட் பெண் சாதனையாளர் என்று பெயரையும் பெற்றிருக்கிறார்.

பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment