Saturday 20 May 2023

பள்ளி விடுமுறையில் மாற்றம்!

 

பள்ளி விடுமுறை நாள்களில் மாற்றம் ஏற்படுவது வெகு தொலைவில் இல்லை.

நீண்ட காலமாக பள்ளி விடுமுறை என்றாலே பல குழப்பங்கள்.  எப்போது பள்ளி தொடங்குகிறது, எப்போது விடுமுறை எதனையும்  நிச்சயிக்க முடியவில்லை.

கடந்த சில வருடங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை கொடுப்பதில கல்வி அமைச்சுக்குத் தலைவலி தான் அதிகம். கோவிட்-19 ஒரு பக்கம் நாட்டையே சீரழித்துவிட்டது. விடுமுறையில் தடங்கல். மழை, புயல் வந்து இன்னொரு தாக்குதலை ஏற்படுத்தி நாட்டை நிலைகுலையச் செய்துவிட்டது. மீண்டும் தடங்கல். இப்போது வெயில் ஒரு பக்கம் மண்டையைப் பிளக்கிறது. மீண்டும் தடங்கல்.  காற்றுத் தூய்மைக்கேடு என்பது ஒரு பக்கம். பிள்ளைகள் பள்ளிகளுக்கு வெளியே விளையாட அனுமதியில்லை.

உண்மையைச் சொன்னால் நான் படித்த காலகட்டங்களில் இப்படி எந்த ஒரு பிரச்சனையையும் நாங்கள் எதிர்நோக்கவில்லை. மழை, வெயில் என்பதெல்லாம் மிகச் சாதாரண விஷயமாகத்தான் இருந்தது. அப்படி எந்த ஒரு தொல்லையையும் நாங்கள் சந்தித்ததில்லை.

ஆனால் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். நான் பள்ளிக்குச் சென்றது பேரூந்தில் தான். அந்தப் பாதை நெடுகிலும் ரப்பர் தோட்டங்கள்.  ரப்பர் மரங்கள் நெடுகிலும் நிறைந்திருக்கும்.  என்ன தான்  காற்றோ, மழையோ, வெய்யிலோ,   அந்த ரப்பர் மரங்கள் தான் அந்த நாசத்தை ஏற்றுக் கொள்ளும். மக்களுக்கு அதனால் அதிகப் பாதிப்பில்லை.  பள்ளிகளுக்கு விடுமுறை தேவை இல்லை. மனிதர்களுக்கும் எந்த சேதமும்  ஏற்பட்டதில்லை.

இப்போது பார்க்கிறேன். அந்த மரங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன.  நாடு அபிவிருத்தி ஆகும் போது அது இயல்பானது தான் என்கிறார்கள். அதனால் மழை, காற்று, வெயில் - அனைத்துமே இப்போது மலேசியர்களுக்கு இயல்பாகிவிட்டது! இனி மேல் அதனைச் சரி செய்யவும்   வழி ஏதுமில்லை.

2026 - ம் ஆண்டு பள்ளி தவணை இனி ஜனவரியில் தொடங்கும் என்பதாக  கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியே நடக்க வேண்டும் என்பதே நமது விருப்பமும் கூட. மீண்டும் பழைய முறைக்கே திரும்புவது  சரியானதாகவே நமக்குப்படுகிறது.

தேவை இல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்தி இப்போது பழைய நிலைமையே சிறந்தது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம்!

No comments:

Post a Comment