Monday 29 May 2023

நல்ல தலைவராக இருங்கள்!

 

சமீப காலங்களில் ஒரு அரசாங்க சார்பற்ற சங்கத்தைப் பற்றியான  செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நமக்கோ அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை.  குற்றம் சாற்றுபவரோ ஒரு வழக்கறிஞர். ஆனால் ஒரு வழக்கறிஞர் என்பதாலேயே அவரைப்  பற்றி நம்மால் உயர்வாக நினைத்துவிட முடியாது.  பொதுவாகவே வழக்கறிஞர்களைப்பற்றி நாம்  ஓரளவாவது அறிந்து  தாம்  வைத்திருக்கிறோம்.

நாம் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.  அதில் முக்கியமான ஒன்று: "மக்களை ஏமாற்றாதீர்கள்" என்பது மட்டும் தான். இந்த அறிவுரை அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அல்ல எல்லா இயக்கங்களிலும் உள்ள தலைவர்களுக்கும் தான்.

நமது சமுதாயத்தினரை ஏமாற்றுவது எளிது என்பது பொதுவான கருத்து. என்ன தான் இந்தியர் என்று சொன்னாலும் கடைசியில் ஏமாளி ஒரு தமிழனாகத்தான்  இருப்பான். இன்று இந்திய சமுதாயத்தில் ஏமாற்றப்படுபவர்கள் என்றால் அது தமிழர்கள் தான். தமிழர் சமுதாயம் இன்னும் இளைத்தவன் என்கிற நிலையிலேயே தான் இருக்கிறோம். வலுத்தவன் நிலைக்கு மாற வேண்டும் என்பது தான் நமது ஆசை.

நமது தலைவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம்  ஒருவன் இளைத்தவன் என்பதற்காக ஏமாற்றாதீர்கள். அந்தக்கால மைக்கா ஹோல்டிங்ஸ்  எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள். அதிகமான பங்குகளை வாங்கியவர்கள் தமிழர்கள்.  ஏமாற்றியவர்களும் தமிழர்கள். ஏமாற்றியவர்கள் தமிழர்கள் என்று சொன்னாலும் அதற்குத் தூபம் போட்டவர்  ஓரு மலபாரி  என்பதும் உண்மை.  சரி  அப்படி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவரின் கடைசி காலம் எப்படி இருந்தது? மெச்சும்படியாக இருந்ததா? 

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  மக்கள் சொத்துகளைக் கொள்ளையடித்தவர்களுக்கு விடுக்கப்பட்ட சாபங்கள் இன்றோ நாளையோ மறைந்து விடாது.  அது மூன்று, நான்கு தலைமுறைவரை நீடிக்கும் என்கின்றன மறை நூல்கள்.  அது உண்மை. எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

தலைவர்களே! நீங்கள் சேவை செய்ய வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சேவைகளைச் செய்து பெயர் வாங்குங்கள்.  இந்தியர்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை நிறையவே வழங்கியிருக்கிறது.  ஆனால் அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க நமது தலைவர்கள் முயற்சி செய்யவில்லை. தமிழர்களுக்குத்தான் கிடைக்கவில்லையே தவிர  மற்ற இனத்தவர்களுக்கு அந்த செய்திகள்  கிடைத்துவிடுகின்றன. எப்படி? தலைமைத்துவம் தமிழரின் கையில் இல்லை என்பது தான் அதன் பொருள்!

எல்லா வகையிலும் நாம் - தமிழர்கள் - வஞ்சிக்கப்படுகிறோம். எந்த இயக்கமாக இருந்தாலும் சரி, கோவில் நிர்வாகமாக இருந்தாலும் சரி - தலைமைப் பொறுப்பு என்னவோ தமிழர்களிடம் தான் இருக்க வேண்டும். அப்போது தான் தமிழர்கள் பயன் பெற முடியும்.  மற்றவர்களிடம் போகும் போது பிற இனததவர் தான் பெரும்பாலும் பயன் பெறுகின்றனர். தமிழர்களிடம் எந்த ஒரு செய்தியும் போய்ச் சேருவதில்லை.

தமிழர்களாக மட்டு அல்ல நல்ல தலைவராகவும் இருங்கள்! அதுவே நமது செய்தி!

No comments:

Post a Comment